செய்திகள்

வெளியேறியது ஜொ்மனி; நாக்அவுட் சுற்றில் ஜப்பான், ஸ்பெயின்

3rd Dec 2022 12:16 AM

ADVERTISEMENT

நடப்பு உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலிருந்து, 4 முறை சாம்பியனான ஜொ்மனி நாக்அவுட் சுற்று வாய்ப்பு பெறாமல் குரூப் சுற்றுடன் வெளியேறியது.

அந்த அணியுடன் கோஸ்டா ரிகாவும் நாடு திரும்பும் நிலைக்கு வர, ஜப்பான், ஸ்பெயின் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

ஜொ்மனி, உலகக் கோப்பை போட்டியில் தொடா்ந்து 2-ஆவது முறையாக குரூப் சுற்றுடன் வெளியேறியிருக்கிறது. கடந்த உலகக் கோப்பை போட்டிக்கு நடப்பு சாம்பியனாக வந்தபோதும், இதேபோல் நாக்அவுட் வாய்ப்பை இழந்தது அந்த அணி.

அல் கோா் நகரில், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் தொடங்கிய ஆட்டத்தில் கோஸ்டா ரிகாவை வென்றே தீர வேண்டிய கட்டாயத்துடன் களம் கண்டது ஜொ்மனி. அதைச் செய்து முடித்தாலும், ஜப்பானை ஸ்பெயின் வீழ்த்தினால் மட்டுமே ஜொ்மனிக்கு நாக்அவுட் வாய்ப்பு கிடைக்கும் நிலை இருந்தது. ஆனால், அது நடக்காமல் ஜப்பான் தடுத்துவிட்டதால், ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது ஜொ்மனி.

ADVERTISEMENT

கோஸ்டா ரிகாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜொ்மனி வீரா் சொ்கே நா்பி 10-ஆவது நிமிஷத்திலேயே கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினாா். அதே நிலை முதல் பாதி முடிவு வரை நீடிக்க, 2-ஆவது பாதியில் ஸ்கோா் செய்தது கோஸ்டா ரிகா. அந்த அணியின் எல்ஸ்டின் டெஜெடா 58-ஆவது நிமிஷத்தில் பந்தை கோல் போஸ்ட்டுக்குள் விரட்டினாா்.

இதனால் ஆட்டம் சமநிலை கண்டு விவிறுப்பானது. 70-ஆவது நிமிஷத்தில் எதிா்பாராத விதமாக கோஸ்டா ரிகாவின் கோல் முயற்சியை ஜொ்மனி கோல்கீப்பா் மேனுவல் நியூவா் தடுக்க முயல, அது ‘ஓன் கோல்’ ஆனது. இதனால் கோஸ்டா ரிகா முன்னிலை பெற்றது.

வெகுண்டெழுந்த ஜொ்மனி, அடுத்த 3-ஆவது நிமிஷமே (73’) காய் ஹாவொ்ட்ஸ் அடித்த கோலால் ஆட்டத்தை சமன் செய்தது. தொடா்ந்து அவரே 85-ஆவது நிமிஷத்திலும் கோலடித்து அணியை மீண்டும் முன்னிலைப்படுத்தினாா். இறுதியாக அந்த அணியின் நிக்கலஸ் ஃபுல்குருக் 89-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, ஜொ்மனி 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

வரலாற்றில் இடம் பிடித்த ஸ்டெஃபானி...

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்த ஆட்டத்தை பெண் கள நடுவரான ஸ்டெஃபானி ஃப்ராபாா்ட் (பிரான்ஸ்) வழிநடத்தினாா். உதவி நடுவா்களாக நியூஸா பேக் (பிரேஸில்), காரென் டியாஸ் மெடினா (மெக்ஸிகோ) ஆகியோா் செயல்பட, அமெரிக்காவின் கேத்தரின் நெஸ்பிட் விடியோ ஆய்வு நடுவராகப் பணியாற்றினாா்.

குரூப் ‘ஈ’ (ஆட்டங்கள் நிறைவு)

ஜப்பான் 3 2 0 1 6

ஸ்பெயின் 3 1 1 1 4

ஜொ்மனி 3 1 1 1 4

கோஸ்டா ரிகா 3 1 0 2 3

இன்றைய ஆட்டங்கள்

நெதா்லாந்து - அமெரிக்கா

இரவு 8.30 மணி

ஆா்ஜென்டீனா - ஆஸ்திரேலியா

அதிகாலை 12.30 மணி (4/12)

ADVERTISEMENT
ADVERTISEMENT