செய்திகள்

விஜய் ஹசாரே கோப்பை: செளராஷ்டிரம் சாம்பியன்

2nd Dec 2022 06:00 PM

ADVERTISEMENT

 

மஹாராஷ்டிர அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி விஜய் ஹசாரே கோப்பையை வென்றுள்ளது செளராஷ்டிரம் அணி.

ஆமதாபாத்தில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் மஹாராஷ்டிரம் - செளராஷ்டிரம் அணிகள் மோதின. விஜய் ஹசாரே இறுதிச்சுற்றுக்கு முதல்முறையாகத் தகுதியடைந்துள்ளது மஹாராஷ்டிரம். செளராஷ்டிர அணி, 2-வது முறையாகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் இருந்தது. டாஸ் வென்ற செளராஷ்டிர அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

ஆரம்பத்தில் 4 ரன்களுக்கு பவன் ஷா ஆட்டமிழந்ததால் நிதானமாக விளையாடினார் ருதுராஜ். அரை சதத்தை எட்ட அவருக்கு 96 பந்துகள் தேவைப்பட்டன. அதன்பிறகு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். காலிறுதியில் இரட்டைச் சதமும் அரையிறுதியில் சதமும் எடுத்த ருதுராஜ், இறுதிச்சுற்றில் 125 பந்துகளில் சதமடித்தார். இறுதியில் 131 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2021 முதல் விஜய் ஹசாரே போட்டியில் 10 இன்னிங்ஸிலேயே 7 சதங்களும் ஒரு இரட்டைச் சதமும் எடுத்துள்ளார் ருதுராஜ்.  

ADVERTISEMENT

மஹாராஷ்டிர அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. 10 ஓவர்கள் வீசி 1 விக்கெட் எடுத்து 25 ரன்கள் மட்டும் கொடுத்தார் ஜெயதேவ் உனாட்கட். சிராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

செளராஷ்டிர அணிக்கு வலுவான தொடக்கம் அமைந்தது. ஷெல்டன் ஜாக்சன் - ஹார்விக் தேசாய் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது. ஹார்விக் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு விக்கெட்டுகள் விழுந்தாலும் ஷெல்டன் ஜாக்சன் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். 116 பந்துகளில் சதத்தை எட்டினார். 40-வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் என்கிற நிலையில் ஷெல்டன் ஜாக்சனும் சிராக்கும் மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். செளராஷ்டிர அணி 46.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்து விஜய் ஹசாரே கோப்பையை வென்றது. ஷெல்டன் ஜாக்சன் 133, சிராக் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

ஷெல்டன் ஜாக்சன் ஆட்ட நாயகன் விருதையும் ருதுராஜ் கெயிக்வாட் தொடர் நாயகன் விருதையும் வென்றார்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT