செய்திகள்

ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகும் மாற்று வீரர் விதிமுறை: அறிவிப்பு

2nd Dec 2022 05:02 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியில் மாற்று வீரர் தொடர்பான புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது.

இந்தாண்டு சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் இம்பாக்ட் வீரர் என்கிற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது பிசிசிஐ. ஒவ்வொரு அணியும் ஆட்டத்துக்கு முன்பு வழக்கமாகக் கொடுக்கப்படும் 11 வீரர்களின் பெயர்களோடு 4 மாற்று வீரர்களின் பெயர்களையும் அளிக்க வேண்டும். அந்த 4 வீரர்களில் ஒருவரை ஆட்டத்தின் நடுவில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏதாவது ஒரு இன்னிங்ஸில் 14-வது ஓவர் முடியும் முன்பு இம்பாக்ட் வீரரை அணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். 

இதையடுத்து இந்த வருட ஐபிஎல் போட்டியிலும் இம்பாக்ட் வீரர் அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது பிசிசிஐ. இதுகுறித்து இன்று வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ADVERTISEMENT

ஐபிஎல் 2023 முதல் டேக்டிகல் கான்சப்ட் என்கிற புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்படும். இது ஐபிஎல் போட்டிக்குப் புதிய அம்சத்தை அளிக்கும். ஒவ்வொரு அணியிலும் மாற்று வீரர் தீவிரமாகப் பங்கேற்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. 

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் என்ன நடந்தது? அணியில் உள்ள 11 பேரில் ஒருவரை இம்பாக்ட் வீரர் மாற்றிக் கொள்ளலாம். இரு இன்னிங்ஸில் ஏதாவது ஒன்றில் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த இம்பாக்ட் வீரர் 14 ஓவர் முடியும் முன்பு பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் ஈடுபடலாம். ஒரு தொடக்க வீரர் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்கிறார். அவருக்குப் பதிலாகக் களமிறங்கும் இம்பாக்ட் வீரர், 14-வது ஓவர் முடியும் முன்பு பேட்டிங்கில் ஈடுபடலாம். என்ன ஆனாலும் ஓர் அணி 11 வீரர்களை மட்டுமே பேட்டிங் செய்ய அனுப்ப முடியும். அதேபோல ஒரு பந்துவீச்சாளருக்குப் பதிலாகக் களமிறங்கி ஓவர்களும் வீசலாம். ஓர் அணி நன்கு பேட்டிங் செய்து பெரிய ஸ்கோரை எடுக்கிறது. அடுத்த இன்னிங்ஸில் ஒரு பேட்டருக்குப் பதிலாகப் பந்துவீச்சாளரை அணியில் சேர்த்திக்கொண்டு பந்துவீச்சைப் பலப்படுத்தலாம். ஓர் அணி பந்துவீசி முடித்துவிடுகிறது. தான் பேட்டிங் ஆடும்போது, சரியாக பேட்டிங் செய்யத் தெரியாத பந்துவீச்சாளருக்குப் பதிலாக ஒரு பேட்டரை அணியில் சேர்த்திக்கொள்ளலாம். 

பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கூடுதலாக ஒரு வீரர் கிடைத்தால் அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்! டாஸ், ஆடுகளத்தின் தன்மை போன்றவற்றால் அணிகள் பெரிதாகப் பாதிக்கப்படுவதைத் தடுக்க இம்பாக்ட் வீரர் உதவுவார். அதேபோல ஒரு வீரருக்குக் காயம் ஏற்பட்டாலும் இந்த வசதி பெரிதும் பயன்படும். ஓர் அணி ஓர் ஆட்டத்தில் ஒரு இம்பாக்ட் வீரரை மட்டுமே பயன்படுத்த முடியும்.

2005, 2006-ம் ஆண்டுகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் சூப்பர் சப் விதிமுறை பயன்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட ஒரு வீரருக்குப் பதிலாக இன்னொருவரைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால் அந்த பேட்டர் ஆட்டமிழந்துவிட்டால் சூப்பர் சப் வீரரால் பேட்டிங் செய்ய முடியாது. அதேபோல ஒரு பந்துவீச்சாளருக்குப் பதிலாகக் களமிறங்கினால் அந்த வீரர் எவ்வளவு ஓவர்களை வீசி முடித்துள்ளாரோ அதிலிருந்து மீதமுள்ள ஓவர்களை மட்டுமே சூப்பர் சப் வீரரால் வீச முடியும். 

ஆஸ்திரேலியாவின் பிபிஎல் போட்டியில் எக்ஸ் ஃபேக்டர் என்கிற ஒரு விதிமுறை அமலில் இருந்தது. தங்களுடைய அணியில் உள்ள 11 பேரில் ஒருவருக்குப் பதிலாக மாற்று வீரரை ஆட்டத்தின் பாதியில் அதாவது 10-வது ஓவரில் அதுவும் முதல் இன்னிங்ஸில் சேர்த்துக்கொள்ளலாம். எந்த வீரருக்குப் பதிலாக மாற்று வீரர் உள்ளே வருகிறாரோ, அந்த வீரர் பேட்டிங், பந்துவீச்சில் ஒரு ஓவருக்கு மேல் ஈடுபட்டிருக்கக் கூடாது. 

இதையடுத்து ஐபிஎல் அறிமுகப்படுத்தும் மாற்று வீரருக்கான புதிய விதிமுறை எந்த விதத்தில் இருக்கப் போகிறது என்பது இனிமேல் தான் தெரிய வரும். 

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT