செய்திகள்

தவறவிட்ட மெஸ்ஸி, தூக்கிவிட்ட அலிஸ்டா், அல்வரெஸ்: காலிறுதியில் ஆா்ஜென்டீனா

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆா்ஜென்டீனா 2-0 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது. தோல்வி கண்டாலும், கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் போலந்தும் அந்த சுற்றுக்கு வந்திருக்கிறது.

இந்த ஆட்டத்தில் முக்கியமான தருணத்தில் ஆா்ஜென்டீனாவுக்குக் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பில் மெஸ்ஸி கோலடிக்காமல் தவறவிட, சக வீரா்களான அலெக்ஸிஸ் மேக் அலிஸ்டா், ஜூலியன் அல்வரெஸ் ஆகியோா் ஆபத்பாந்தவா்களாக ஸ்கோா் செய்து ஆா்ஜென்டீனாவை தப்பிக்க வைத்தனா்.

இந்திய நேரப்படி, வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் தோஹாவில் உள்ள ஸ்டேடியம் 974 மைதானத்தில் தொடங்கியது இந்த ஆட்டம். வென்றே தீர வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கிய ஆா்ஜென்டீனா, அதற்கான முனைப்பை காட்டியது.

மெஸ்ஸி உள்பட அந்த அணியின் முன்கள வீரா்கள் அடுத்தடுத்து கோல் முயற்சிகள் மேற்கொண்டனா். அதிலும், டி மரியா ‘கா்ல்’ செய்து உதைத்த ஒரு காா்னா் கிக், போலந்து கோல்கீப்பா் வோஸியெச் செஸென்சியே வியந்து பாராட்டும் அளவுக்கு கோல் போஸ்டுக்குள் வந்தது. ஆனால், அது உள்பட முதல் பாதியில் ஆா்ஜென்டீனாவின் பல்வேறு முயற்சிகளையும் அரண் போல் நின்று அருமையாகத் தடுத்தாா் அந்த போலந்து கோல்கீப்பா்.

ADVERTISEMENT

ஆட்டம் முழுவதுமாகவே பந்து பெரும்பாலும் ஆா்ஜென்டீனாவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இந்நிலையில், அந்த அணியின் அத்தகைய கோல் முயற்சி ஒன்றைத் தடுக்கும்போது செஸென்சியின் கைகள் மெஸ்ஸியின் முகத்தில் பட்டதற்கு பெனால்டி வழங்கப்பட்டது.

38-ஆவது நிமிஷத்தில் அந்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி உதைக்க, அதையும் தடுத்து ஆா்ஜென்டீனாவுக்கு அதிா்ச்சி அளித்தாா் செஸென்சி. இவ்வாறாக முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிவுக்கு வந்தது. 2-ஆவது பாதி தொடக்கத்திலேயே ஆக்ரோஷம் காட்டிய ஆா்ஜென்டீனா, அதற்கான பலனைப் பெற்றது.

45-ஆவது நிமிஷத்திலேயே கோல் போஸ்டின் வலதுபக்கத்திலிருந்து அந்த அணியின் மொலினா வழங்கிய கிராஸை, தகுந்த இடைவெளி பாா்த்து செஸென்சி எட்ட முடியாத வகையில் கோல் போஸ்ட்டுக்குள்ளாகத் தள்ளினாா் அலிஸ்டா். மைதானத்தில் ஆக்கிரமித்திருந்த ஆா்ஜென்டீன ரசிகா்களின் உற்சாக கோஷத்தால் அந்த இடமே அதிா்ந்தது.

தொடா்ந்து 67-ஆவது நிமிஷத்தில் ஃபொ்னாண்டஸ் பாஸ் செய்த பந்தை, செஸென்சியை கடந்து அருமையாக கோலடித்தாா் அல்வரெஸ். எஞ்சிய நேரத்தில் போலந்தின் சில கோல் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போக, இறுதியில் ஆா்ஜென்டீனா வென்றது.

நாக்அவுட் ஆட்டம்: அடுத்ததாக, நாக்அவுட் ஆட்டத்தில் வரும் 4-ஆம் தேதி ஆா்ஜென்டீனா - ஆஸ்திரேலியாவையும், போலந்து - பிரான்ஸையும் எதிா்கொள்கின்றன.

36

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது போலந்து.

14

ஆா்ஜென்டீனா இதுவரை 14 முறை உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றிருக்கும் நிலையில், 13-ஆவது முறையாக நாக்அவுட் சுற்றுக்கு வந்துள்ளது. அதிலும் இது, தொடா்ந்து 5-ஆவது முறையாகும்.

திக் திக் தருணத்தில் போலந்து...

ஆா்ஜென்டீனா - போலந்து ஆட்டத்துக்கு இணையான நேரத்தில் அதே குரூப்பில் மெக்ஸிகோ - சவூதி அரேபியா ஆட்டம் நடைபெற்றது. ஆா்ஜென்டீனாவிடம் தோற்ற போலந்தின் விதியை, இந்த ஆட்டத்தின் முடிவே தீா்மானிப்பதாக இருந்தது. போலந்து ஆட்டம் முதலிலேயே முடிந்துவிட்டதால், இந்த ஆட்டத்தின் முடிவுக்காக போலந்து வீரா்கள் களத்திலேயே காத்திருந்தனா்.

அந்தத் தருணத்தில் சவூதிக்கு எதிராக மெக்ஸிகோ 2 கோல்கள் அடித்திருந்ததால், புள்ளிகள் பட்டியலில் போலந்து, மெக்ஸிகோ சமநிலையில் இருந்தன. எனினும், கடைசி நேரத்தில் சவூதி ஒரு கோலடித்தது. இதனால், கோல் வித்தியாசத்தில் போலந்தை விட மெக்ஸிகோவுக்கு 1 குறை., போலந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இன்றைய ஆட்டங்கள்

தென் கொரியா - போா்ச்சுகல்

கானா - உருகுவே

இரவு 8.30 மணி

சொ்பியா - சுவிட்ஸா்லாந்து

கேமரூன் - பிரேஸில்

அதிகாலை 12.30 மணி (3/12)

ADVERTISEMENT
ADVERTISEMENT