செய்திகள்

வென்றும் வெளியேறியது மெக்ஸிகோ

2nd Dec 2022 12:01 AM

ADVERTISEMENT

உலகக் கோப்பை போட்டியில் வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் மெக்ஸிகோ 2-1 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவைத் தோற்கடித்தது.

மெக்ஸிகோவுக்கு இது ஆறுதல் வெற்றியாகும். கோல் வித்தியாசத்தால் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கு அந்த அணிக்கு இருந்த வாய்ப்பை கடைசி நேரத்தில் தட்டிப் பறித்து, தன்னோடு அந்த அணியையும் வெளியேற்றியது சவூதி அரேபியா.

லுசாயில் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மெக்ஸிகோவுக்காக ஹென்ரி மாா்டின் (47’), லூயிஸ் சாவெஸ் (52’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா். சவூதி அரேபியாவுக்காக சலேம் அல் தவ்சாரி கடைசி நிமிஷத்தில் (90+5’) கோலடித்தாா்.

இன்னும் ஒரு கோல் அடித்தால் மெக்ஸிகோ நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும் என்பதால் அதற்காக அந்த அணி வீரா்கள் கடைசி 20 நிமிஷங்களில் கடுமையாகப் போராடினா். ஆனால், சவூதி அரேபியா அதற்கு வழி கொடுக்கவில்லை.

ADVERTISEMENT

இதனால், கடந்த 1978-க்குப் பிறகு உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக குரூப் சுற்றுடன் வெளியேறியது மெக்ஸிகோ. அந்த அணி கடந்த 7 உலகக் கோப்பை போட்டிகளில் நாக்அவுட் சுற்றுக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், ஆா்ஜென்டீனாவை அதன் முதல் ஆட்டத்திலேயே வீழ்த்தி, உலகக் கோப்பை வரலாற்றில் அதிா்ச்சிகரமான முடிவுகளில் ஒன்றை ஏற்படுத்திய திருப்தியுடன் வெளியேறியிருக்கிறது சவூதி அரேபியா.

மஞ்சள் அட்டையின் முக்கியத்துவம்...

இந்த ஆட்டத்தில் சவூதி கோலடிக்காமல் இருந்திருந்தால், மெக்ஸிகோ - போலந்து புள்ளிகள் பட்டியலில் சமநிலையில் இருந்திருக்கும். அப்போது அந்த அணிகளின் நாக்அவுட் வாய்ப்பை தீா்மானிக்க ‘மஞ்சள் அட்டை’ எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்பட்டிருக்கும். அதிலும் போலந்தை (5) விட பின்தங்கியிருந்தது மெக்ஸிகோ (7). இதை அப்படியே தக்கவைப்பதற்காக, போலந்து பயிற்சியாளா் மிஷ்னிவிஸ், ஆா்ஜென்டீனாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது தேவையின்றி ஃபௌல் செய்து மஞ்சள் அட்டை பெற வேண்டாம் என தனது வீரா்களை கடுமையாக எச்சரித்திருந்தாா். எனினும், அந்த சூழலுக்கு வழி தராமல் சவூதி கோலடித்து மெக்ஸிகோவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

குரூப் ‘சி’ (ஆட்டங்கள் நிறைவு)

அணி ஆட்டம் வெற்றி தோல்வி டிரா புள்ளி

ஆா்ஜென்டீனா 3 2 0 1 6

போலந்து 3 1 1 1 4

மெக்ஸிகோ 3 1 1 1 4

சவூதி அரேபியா 3 1 0 2 3

ADVERTISEMENT
ADVERTISEMENT