செய்திகள்

டி20 பாணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் இங்கிலாந்து தொடக்க வீரர்கள்!

1st Dec 2022 01:30 PM

ADVERTISEMENT

 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி, 27 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 174 ரன்கள் குவித்துள்ளது. 

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. இதற்காக ராவல்பிண்டியில் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென 8 வீரர்கள் உள்பட இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 14 பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார்கள். ஒரு வீரரைத் தவிர அனைவரும் உடல்நலம் தேறிவிட்டதால் திட்டமிட்டபடி டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இங்கிலாந்து அணியில் போக்ஸுக்குப் பதிலாக வில் ஜாக்ஸ் தேர்வாகியுள்ளார். போப் விக்கெட் கீப்பராகச் செயல்படவுள்ளார். வில் ஜாக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்கள். பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ராஃப் உள்பட நான்கு பேர் அறிமுகமாகியுள்ளார்கள். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 

பாகிஸ்தானில் 17 வருடங்களுக்குப் பிறகு டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து அணிக்கு அற்புதமான தொடக்கம் கிடைத்தது. முதல் ஓவரிலேயே 14 ரன்கள் எடுத்தார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 வருடங்களுக்குப் பிறகு முதல் ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இவை. முதல் 10 ஓவர்களில் 63 ரன்கள். 2016-க்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறார் பென் டக்கட். அவரும் ஸாக் கிராவ்லியும் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார்கள். 13.4 ஓவர்களில் 100 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். இதைப் பார்த்த ரசிகர்களுக்குத் தாங்கள் பார்ப்பது டெஸ்ட் கிரிக்கெட்டா அல்லது டி20 கிரிக்கெட்டா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. 

ADVERTISEMENT

ஸாக் கிராவ்லி 38 பந்துகளிலும் டக்கட் 50 பந்துகளிலும் அரை சதம் எடுத்தார்கள். முதல் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி, 27 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 174 ரன்கள் குவித்தது. கிராவ்லி 91, டக்கட் 77 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இதன்பிறகு ஸாக் கிராவ்லி 86 பந்துகளில் சதமடித்து அசத்தினார். டெஸ்ட் வரலாற்றில் விரைவாக சதமடித்த இங்கிலாந்து தொடக்க வீரர் என்கிற பெருமையை அவர் அடைந்தார். 

பாகிஸ்தான் அணி 31 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 201 ரன்கள் எடுத்துள்ளது. கிராவ்லி 106, டக்கட் 89 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். 

Tags : Zak Crawley
ADVERTISEMENT
ADVERTISEMENT