செய்திகள்

துனிசியாவின் துணிவும் ஆஸி.யின் செல்வனும்: 11-வது நாள் புள்ளிவிவரங்கள்

1st Dec 2022 04:42 PM

ADVERTISEMENT

 

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் நேற்றைய ஆட்டங்களில் ஆஸ்திரேலியா டென்மார்க்கை 1-0 என வீழ்த்தியது. நடப்பு சாம்பியன் பிரான்ஸை 1-0 என வீழ்த்தி அதிர்ச்சியளித்தது துனிசியா. அடுத்த இரு ஆட்டங்களில் ஆர்ஜென்டீனா போலந்தை 2-0 எனவும் மெக்ஸிகோ சவூதி அரேபியாவை 2-1 எனவும் வீழ்த்தின. போலந்தும் மெக்ஸிகோவும் தலா 4 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் போலந்து அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதனால் நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் மெக்ஸிகோ அணியால் அடுத்தச் சுற்றுக்குச் செல்ல முடியவில்லை. 

இதையடுத்து ஆஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா, போலந்து ஆகிய மூன்று அணிகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குப் புதிதாகத் தகுதியடைந்துள்ளன. 

11-வது நாள் ஆட்டங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்:

ADVERTISEMENT

* பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல், நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா, போலந்து என இதுவரை 10 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன. இன்னும் 6 அணிகள் அடுத்த ஆட்டங்களின் முடிவில் தேர்வு செய்யப்படவுள்ளன. 

* 2006, 2002 என 2-வது முறையாக உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. 

* உலகக் கோப்பையில் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ஆஸ்திரேலியா மோதிய 12 ஆட்டங்களில் 2 வெற்றிகள், 8 தோல்விகள், 2 டிராக்கள் என முடிவுகள் கிடைத்துள்ளன. நேற்று கிடைத்தது 2-வது வெற்றி. இதற்கு முன்பு 2010-ல் செர்பியாவை வீழ்த்தியது. 

* போலந்து கோல் கீப்பரான செஸ்னி, இந்த உலகக் கோப்பையில் இரு பெனால்டி கிக் ஷாட்களைத் தடுத்துள்ளார். நேற்று மெஸ்ஸியின் பெனால்டியைத் தடுத்தார். அதற்கு முன்பு சவூதி அரேபியாக்கு எதிரான ஆட்டத்தில். 

* ஒரு உலகக் கோப்பையில் இரு பெனால்டிகளைத் தடுத்த 3-வது கோல் கீப்பர், செஸ்னி. 

* நேற்று பெனால்டியில் மெஸ்ஸி கோல் அடித்திருந்தால் மார்கஸ் ராஷ்ஃபோர்டு,  கிலியன் எம்பப்பே, கூடி காக்போ, வெலன்சியா ஆகியோருடன் இணைந்து இந்த உலகக் கோப்பையில் அதிகபட்சமாக 3 கோல்களை அடித்த வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்திருப்பார். சவூதி அரேபியா, மெக்சிகோ ஆட்டங்களில் தலா ஒரு கோலை மெஸ்ஸி அடித்திருந்தார். 

* உலகக் கோப்பையில் ஒரு வீரர் அடித்த இரு பெனால்டி ஷாட்கள் தடுக்கப்பட்டது மெஸ்ஸிக்கு மட்டும் தான். 

* உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவுக்காக 22 ஆட்டங்களில் விளையாடி மரடோனாவின் சாதனையைத் தாண்டியுள்ளார் மெஸ்ஸி. உலகக் கோப்பையில் அதிக ஆட்டங்களை விளையாடிய வீரர்களில் மெஸ்ஸிக்கு 4-வது இடம். 

* மெஸ்ஸி இதுவரை நாட்டுக்காவோ கிளப்புக்காகவோ விளையாடிய போட்டிகளில் ஒருமுறை கூட குரூப் நிலையில் வெளியேறியதில்லை. 

* உலகக் கோப்பையில் முதல் ஆட்டத்தில் தோற்றாலும் பிறகு போராடி நாக் அவுட் சுற்றுக்கு ஆர்ஜென்டீனா அணி முன்னேறுவது இது 4-வது முறை. வேறு எந்த நாட்டுக்கும் இந்தப் பெருமை கிடையாது.

* 2002-ல் தகுதி பெறவில்லை. அதன்பிறகு 2006 முதல் நாக் அவுட் சுற்றுக்குத் தொடர்ந்து முன்னேறியுள்ளது ஆர்ஜென்டீனா.

 

* இந்த உலகக் கோப்பையில் ஆசியக் கால்பந்து கூட்டமைப்பைச் சேர்ந்த ஆஸ்திரேலியா நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. 2006-ல் ஓசியானா கூட்டமைப்பில் அங்கம் வகித்து நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதுபோல இரு கூட்டமைப்புகளில் இடம்பெற்று இருமுறை நாக் அவுட் சுற்றுக்குத் தகுதியடைந்த முதல் நாடு ஆஸ்திரேலியா.

* ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக ஆசியக் கால்பந்து கூட்டமைப்பைச் சேர்ந்த மேலும் 3 நாடுகளுக்கு நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. 2002, 2010-ல் மட்டும் தான் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசியக் கால்பந்து கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறின. 

* 1974 முதல் இப்போது வரை உலகக் கோப்பைக்கு ஆறுமுறை தகுதியடைந்துள்ளது ஆஸ்திரேலியா. இந்த உலகக் கோப்பைக்கு முன்பு ஓர் ஆட்டத்தில் மட்டுமே எதிரணியை கோல் அடிக்கவிடாமல் தடுத்துள்ளது. 1974-ல் சிலி அணிக்கு எதிராக. ஆனால் இந்தமுறை இரு ஆட்டங்களில் எதிரணியை கோலடிக்க விடாமல் தடுத்துள்ளது. துனிசியா, டென்மார்க் அணிகளுக்கு எதிராக தலா 1-0 என வென்றுள்ளது. 

* உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது ஆஸ்திரேலியா.  இந்தமுறை மட்டுமே 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது. 

* டென்மார்க் அணி விளையாடிய 6 உலகக் கோப்பையில் முதல்முறையாக ஒரு வெற்றியும் பெறாமல் வெளியேறியுள்ளது. 

* நேற்றைய ஆட்டத்தில் பந்தை நீண்ட தூரம் எடுத்துச் சென்று கோலடித்தார் ஆஸ்திரேலியாவின் மேத்யூ லெக்கி. ஆஸி. அணிக்காக அவர் அடித்த 14-வது கோல். 

* உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்பிரிக்கக் கால்பந்து கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளுடன் மூன்று முறை தோற்றுள்ளது பிரான்ஸ். வேறு எந்த நாடும் இத்தனை முறை தோற்றதில்லை. 

* ஐரோப்பிய நாட்டுக்கு எதிராக முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது துனிசியா. இதற்கு முன்பு விளையாடிய 11 ஆட்டங்களில் 7-ல் தோற்றது. 

* உலகக் கோப்பையில் இதுவரை விளையாடிய 18 ஆட்டங்களில் 3-வது வெற்றியை அடைந்துள்ளது துனிசியா.

* 2016 யூரோ இறுதிச்சுற்றுக்குப் பிறகு உலகக் கோப்பை, யூரோ கோப்பை என இவ்விரு போட்டிகளிலும் இதுவரை விளையாடிய 13 ஆட்டங்களிலும் பிரான்ஸ் தோற்றதேயில்லை. அப்படியொரு ஜாம்பவான் அணியை வீழ்த்தியுள்ளது துனிசியா. 

* 1978-க்குப் பிறகு முதல்முறையாக (1990-ல் தடை செய்யப்பட்டதால் பங்கேற்கவில்லை) குரூப் நிலையிலேயே வெளியேறியுள்ளது மெக்ஸிகோ. கடந்த 7 உலகக் கோப்பைப் போட்டிகளிலும் மெக்ஸிகோ நாக் அவுட் சுற்றுக்குத் தகுதியடைந்தது. கூடுதலாக ஒரு கோல் அடிக்காத காரணத்தால் மெக்ஸிகோவால் இந்தமுறை தகுதி பெற முடியவில்லை. 

* உலகக் கோப்பையில் குரூப் நிலையில் 8 முறை வெளியேறியுள்ளது மெக்ஸிகோ. இதுபோல அதிகமுறை வெளியேறிய நாடுகளான தென் கொரியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளின் வரிசையில் அது இணைந்துள்ளது. 

* உலகக் கோப்பையில் 430 நிமிடங்களுக்கு கோல் அடிக்காமல் மெக்ஸிகோ இருந்த நிலையில் ஹென்றி மார்டினின் கோல் இந்த நிலையை மாற்றியது. இந்த ஆட்டத்துக்கு முன்பு உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களில் மெக்ஸிகோ ஒரு கோலும் அடிக்கவில்லை. 

* 1966-க்குப் பிறகு ஃப்ரீ கிக்கில் நேரடியாக கோலடித்த முதல் மெக்ஸிகோ வீரர், லூயிஸ் சாவேஸ்.  மெக்ஸிகோவுக்காக விளையாடிய 12 ஆட்டங்களில் முதல்முறையாக கோலடித்துள்ளார். 

* 1986-க்குப் பிறகு முதல்முறையாக நாக் அவுட் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது போலந்து. அந்த அணி கடைசியாக விளையாடிய 3 உலகக் கோப்பைப் போட்டிகளிலும் குரூப் நிலையிலேயே வெளியேறியது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT