செய்திகள்

தெ.ஆ. டி20 லீக் போட்டியின் பெயர் அறிவிப்பு

31st Aug 2022 04:32 PM

ADVERTISEMENT

 

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தும் டி20 லீக் போட்டி தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 


2023 ஜனவரி மாதம் ஆறு அணிகள் பங்கேற்கும் புதிய டி20 லீக் போட்டியை சூப்பர் ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். தெ.ஆ. டி20 லீக் போட்டியின் தலைவராக முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் செயல்படுவார்.  

தெ.ஆ. டி20 லீக் போட்டியில் பங்கேற்கும் ஆறு அணிகளையும் ஐபிஎல் உரிமையாளர்கள் விலைக்கு வாங்கியுள்ளார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜோஹன்னஸ்பர்க் அணியையும் மும்பை இந்தியன்ஸ் - கேப் டவுன் அணியையும் சன் டிவியின் சன் ரைசர்ஸ் - போர்ட் எலிசபெத் அணியையும் லக்னெள - டர்பன் அணியையும் ராஜஸ்தான் ராயல்ஸ் - பார்ல் அணியையும் தில்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஜிண்டால் செளத் வெஸ்ட் ஸ்போர்ட்ஸ் - பிரிடோரியா அணியையும் ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளன. தென்னாப்பிரிக்க நிறுவனங்கள் ஏலத்தில் போட்டியிட்டாலும் அதிக தொகையை முன்வைத்து ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் தெ.ஆ. டி20 லீக் போட்டியின் அணிகளைப் பெற்றுள்ளார்கள். சிஎஸ்கே அணி முதல்முறையாக வெளிநாட்டு லீக் போட்டியில் ஓர் அணியை விலைக்கு வாங்கியுள்ளது.  

ADVERTISEMENT

இப்போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 17 வீரர்கள் இடம்பெறுவார்கள். அவர்களில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். டி20 லீகின் விதிமுறைகளின்படி ஒவ்வொரு அணியும் ஏலத்துக்கு முன்பு மூன்று வெளிநாட்டு வீரர்கள், ஒரு தெ.ஆ. வீரர், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத ஒரு தெ.ஆ. வீரர் என  ஐந்து வீரர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஒரு மாதம் வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் 33 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

ஜோஹன்னஸ்பர்க் அணியை வாங்கியுள்ள சிஎஸ்கே அணி - டு பிளெஸ்சிஸ், மொயீன் அலி, மஹீஸ் தீக்‌ஷனா, ரொமாரியோ ஷெப்பர்ட், ஜெரால்ட் கூட்ஸி ஆகிய வீரர்களைத் தேர்வு செய்துள்ளது. சிஎஸ்கேவின் பயிற்சியாளரான ஃபிளெமிங், ஜோஹன்னஸ்பர்க் அணியின் பயிற்சியாளராகவும் செயல்படவுள்ளார். எரிக் சிமன்ஸ் உதவிப் பயிற்சியாளராகத் தேர்வாகியுள்ளார். கேப் டவுன் அணியை விலைக்கு வாங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், எம்.ஐ. கேப் டவுன் (மை கேப்டவுன் என அழைக்கவேண்டும்) என அணிக்குப் பெயர் சூட்டியுள்ளது. ரஷித் கான், லிவிங்ஸ்டன், சாம் கரண், ரபாடா, பிரேவிஸ் என பிரபல டி20 வீரர்களை அந்த அணி தேர்வு செய்துள்ளது. பிரேவிஸ் ஏற்கெனவே ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரராக உள்ளார். 

இந்நிலையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தும் டி20 லீக் போட்டிக்கு எஸ்ஏ20 (SA20) எனப் பெயரிடப்பட்டுள்ளதாக ஸ்மித் இன்று அறிவித்துள்ளார். வீரர்களின் ஏலம் செப்டம்பர் 19 அன்று நடைபெறும் என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். ஆறு அணிகளில் எம்.ஐ. கேப் டவுன், ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ், டர்பன் ஃபிரான்சைஸ் ஆகிய மூன்று அணிகளும் தலா 5 வீரர்களைத் தேர்வு செய்துள்ளன. பார்ல் ராயல்ஸ்  அணி 4 வீரர்களையும் பிரிடோரியா கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய இரு அணிகளும் தலா 2 வீரர்களையும் தேர்வு செய்துள்ளன. 

Tags : t20 CSA SA20
ADVERTISEMENT
ADVERTISEMENT