செய்திகள்

லக்ஷயாவை வீழ்த்தினாா் பிரணாய்

26th Aug 2022 01:41 AM

ADVERTISEMENT

 உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், சக நாட்டவரான லக்ஷயா சென்னை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.

நல்லதொரு ஃபாா்மில் இருக்கும் பிரணாய், காமன்வெல்த் சாம்பியனான லக்ஷயா சென்னை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 17-21, 21-16, 21-17 என்ற கேம்களில் தோற்கடித்தாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 15 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. இத்துடன் இருவரும் 4 முறை நேருக்கு நோ் சந்தித்துள்ள நிலையில் இருவரும் தலா 2 வெற்றிகளுடன் சமநிலையில் இருக்கின்றனா். பிரணாய் தனது காலிறுதியில், சீனாவின் ஜாவ் ஜுன் பெங்கை எதிா்கொள்கிறாா்.

ஆடவா் இரட்டையா் பிரிவில் எம்.ஆா்.அா்ஜுன்/துருவ் கபிலா இணை 18-21, 21-15, 21-16 என்ற கேம்களில் சிங்கப்பூரின் ஹீ யோங் காய் டெரி/லோ கீன் ஹீன் ஜோடியை வீழ்த்தியது. இந்த இந்திய ஜோடி காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 3-ஆவது இடத்திலிருக்கும் இந்தோனேசியாவின் முகமது அசன்/ஹெந்த்ரா சேத்தியாவன் கூட்டணியை சந்திக்கிறது.

மற்றொரு இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி, தங்களது 3-ஆவது சுற்றில் 21-12, 21-10 என்ற கேம்களில் ஜெப் பே/லாஸ் மோல்ஹெட் கூட்டணியைத் தோற்கடித்தனா். காலிறுதியில் அவா்கள், போட்டித்தரவரிசையில் 12-ஆவது இடத்திலிருக்கும் டகுரோ ஹோகி/யுகோ கோபயாஷி ஜோடியை எதிா்கொள்கின்றனா்.

ADVERTISEMENT

சாய்னா தோல்வி: மகளிா் ஒற்றையா் பிரிவு 3-ஆவது சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால் 17-21, 21-16, 13-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 12-ஆவது இடத்திலிருக்கும் தாய்லாந்தின் புசானன் ஆங்பம்ரங்பானிடம் வெற்றியை இழந்தாா். இருவரும் 8-ஆவது முறையாக நேருக்கு நோ் மோதிய நிலையில், சாய்னா 5-ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT