செய்திகள்

வங்கதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் நியமனம்

19th Aug 2022 03:52 PM

ADVERTISEMENT

 

வங்கதேச கிரிக்கெட் அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களுக்கான பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீராம், இந்திய அணிக்காக 2000 முதல் 2004 வரை 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த ஆறு வருடங்களாக ஆஸி. அணியில் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராகவும் உதவிப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். சமீபத்தில் அப்பதவியிலிருந்து அவர் விலகினார். ஆஸி. அணியில் ஸ்ரீராம் பணியாற்றிய காலக்கட்டத்தில் ஆடம் ஸாம்பா, அஷ்டன் அகர் ஆகியோர் திறமையான சுழற்பந்துவீச்சாளர்களாகப் புகழ் பெற்றார்கள். மேக்ஸ்வெல், டி20 ஆட்டங்களில் பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதிலும் ஸ்ரீராமின் பங்களிப்பு உண்டு. ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் குழுவில் உள்ளார்.

இந்நிலையில் வங்கதேச அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களுக்கான பயிற்சியாளராக ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் தொடங்கவுள்ள ஆசியக் கோப்பை டி20 போட்டி, டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆகிய முக்கியமான போட்டிகளில் வங்கதேச அணியின் பயிற்சியாளராக அவர் செயல்படவுள்ளார். 

ADVERTISEMENT

டி20 உலகக் கோப்பை வரை ஸ்ரீராமைப் பயிற்சியாளராக நாங்கள் நியமித்துள்ளோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த இயக்குநர் ஒருவர் இத்தகவலை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். 

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த  ரஸ்ஸல் டொமினிகோ, வங்கதேச டெஸ்ட் ஆட்டங்களுக்கான பயிற்சியாளராகத் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : Sriram Coach
ADVERTISEMENT
ADVERTISEMENT