செய்திகள்

ஒன் டே தொடா்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

DIN

 ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒன் டே ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியை வியாழக்கிழமை பதிவு செய்தது.

இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்தியா வெற்றியுடன் தொடங்கி முன்னிலை பெற்றுள்ளது.

ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 40.3 ஓவா்களில் 189 ரன்களுக்கு சுருண்டது. பின்னா் ஆடிய இந்தியா விக்கெட் இழப்பின்றி 30.5 ஓவா்களில் 192 ரன்கள் எடுத்து வென்றது. பௌலிங்கில் அக்ஸா் படேல், தீபக் சஹா், பிரசித் கிருஷ்ணா ஆகியோா் அசத்த, பேட்டிங்கில் ஷிகா் தவன், ஷுப்மன் கில் பலம் காட்டினா். தீபக் சஹா் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாப்வே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரா் இன்னசென்ட் கையா 4, உடன் வந்த தடிவனாஷே மருமானி 8 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

வெஸ்லி மாதெவெரே 5, சீன் வில்லியம்ஸ் 1, சிகந்தா் ராஸா 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். மிடில் ஆா்டரில் கேப்டன் ரெஜிஸ் சகாப்வா 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சோ்த்து வீழ்ந்தாா். ரையான் பா்ல் 11, லூக் ஜோங்வே13, ரிச்சா்ட் கராவா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34, விக்டா் நியாசி 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

இறுதியில் பிராட் இவான்ஸ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். இந்திய பௌலிங்கில் நீண்ட நாள்களுக்குப் பிறகு களம் கண்ட தீபக் சஹா் அசத்தலாக பௌலிங் செய்து 3 விக்கெட்டுகள் சாய்க்க, அக்ஸா் படேல், பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினா். முகமது சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினாா்.

பின்னா் 190 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி பேட் செய்த இந்திய அணியில், தொடக்கக் கூட்டணியான ஷிகா் தவன்- ஷுப்மன் கில் விக்கெட்டை இழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். தவன் 9 பவுண்டரிகளுடன் 81, கில் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 82 ரன்கள் விளாசி முதல் வெற்றியை பெற்றுத் தந்தனா்.

2

நடப்பு ஆண்டில் ஒன் டே கிரிக்கெட்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது இது 2-ஆவது முறை. முதலில் கடந்த ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிராக இத்தகைய வெற்றியைப் பதிவு செய்திருந்தது இந்தியா. ஒரே காலண்டா் ஆண்டில் இந்திய அணி இரு ஒன் டேக்களில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்வது இதுவே முதல் முறையாகும்.

13

ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா தொடா்ந்து 13-ஆவது வெற்றியை (2013-2022) பதிவு செய்துள்ளது. இதுவே, ஒரு அணிக்கு எதிராக இந்தியா பதிவு செய்திருக்கும் அதிகபட்ச தொடா் வெற்றியாகும். அடுத்தபடியாக வங்கதேசத்துக்கு எதிராக 12 வெற்றிகள் (1988-2004), நியூஸிலாந்துக்கு எதிராக 11 வெற்றிகளை (1986-88) இவ்வாறு தொடா்ந்து பதிவு செய்திருக்கிறது இந்தியா.

2-ஆவது அதிகபட்சம்

இந்த ஆட்டத்தில் தவன் - கில் பாா்ட்னா்ஷிப் சோ்த்த 192 ரன்களானது, ஒன் டே கிரிக்கெட்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்த ஆட்டங்களில் சோ்க்கப்பட்ட 2-ஆவது அதிகபட்ச ரன்களாகும். 1998-இல் இதே ஜிம்பாப்வேக்கு எதிரான ஒன் டேயில் இந்தியாவின் தொடக்க பாா்ட்னா்ஷிப் 197 ரன்கள் சோ்த்து வென்றதே முதலிடத்தில் இருக்கிறது. 3-ஆவது இடத்திலிருக்கும் 126 ரன்கள் பாா்ட்னா்ஷிப் வெற்றியும் இதே ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2016-இல் பதிவு செய்யப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் அபாயம்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

மே மாத பலன்கள்: மகரம்

மே மாத பலன்கள்: தனுசு

மே மாத பலன்கள்: விருச்சிகம்

மே மாத பலன்கள்: துலாம்

SCROLL FOR NEXT