செய்திகள்

லார்ட்ஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 161 ரன்கள் முன்னிலை பெற்ற தென்னாப்பிரிக்கா

19th Aug 2022 05:01 PM

ADVERTISEMENT

 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் எடுத்துள்ளது. 

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்டுகளில் விளையாடுகிறது தென்னாப்பிரிக்கா. முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி இங்கிலாந்து பேட்டர்களைத் தடுமாறச் செய்தார்கள். போப் மட்டும் பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார். 

ADVERTISEMENT

மழை காரணமாக முதல் நாளன்று 32 ஓவர்கள் மட்டுமே வீச முடிந்தது. இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. தெ.ஆ. பந்துவீச்சாளர்கள் நோர்கியா 3 விக்கெட்டுகளும் ரபாடா 2 விக்கெட்டுகளும் யான்சென் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 

இன்றும் தெ.ஆ.  பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசியதால் இங்கிலாந்து அணி, 45 ஓவர்களில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. போப் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் போல்ட் ஆனார். தெ.ஆ. பந்துவீச்சாளர்களில் ரபாடா 5 விக்கெட்டுகளும் நோர்கியா 3 விக்கெட்டுகளும் யான்சென் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

தென்னாப்பிரிக்க அணிக்கு வலுவான தொடக்கம் கிடைத்தது. முதல் விக்கெட்டுக்கு எல்கரும் எர்வீயும் 85 ரன்கள் சேர்த்தார்கள். எர்வீ 73 ரன்களிலும் எல்கர் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். மஹாராஜ் 41 ரன்களும் மார்கோ யான்சென் ஆட்டமிழக்காமல் 41 ரன்களும் எடுத்து அணிக்குக் கூடுதல் ரன்கள் சேர்த்தார்கள். 2-ம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 77 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. 3 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் 124 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்று தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 89.1 ஓவர்களில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நோர்கியா 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பிராட், ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். சமீபகாலமாக பல்வேறு நெருக்கடியான தருணங்களைச் சிறப்பாக எதிர்கொண்ட இங்கிலாந்து அணி, இந்த டெஸ்டில் எப்படி மீண்டு வரப்போகிறது என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT