செய்திகள்

சதமடிக்காமல் 1000 நாள்களைக் கடந்த விராட் கோலி!

19th Aug 2022 05:46 PM | ச.ந. கண்ணன்

ADVERTISEMENT

 

சர்வதேச கிரிக்கெட்டில் சதமடிக்காமல் இன்றுடன் 1000 நாள்களைக் கடந்துள்ளார் விராட் கோலி.

வேதனையான விஷயம் தான். சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக கோலி சதமடிக்கவில்லை. 

2019 நவம்பர் 23 அன்று வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற டெஸ்டில் 136 ரன்கள் எடுத்தார் கோலி. அது அவருடைய 70-வது சதம். 27-வது டெஸ்ட் சதம். அடுத்தச் சதம் எப்போது என்று நீண்ட நாளாகக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

ADVERTISEMENT

ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசியாக ஆகஸ்ட் 2019-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகத் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்தார். யார் கண் பட்டதோ, இன்றுவரை மற்றொரு சதத்தைக் காண முடியவில்லை. (சர்வதேச டி20யில் ஒரு சதமும் அடித்ததில்லை.)

கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் கடந்த ஆறு வருடங்களில் முதல்முறையாக டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேறினார் கோலி. நவம்பர் 2016-க்குப் பிறகு முதல்முறையாக டாப் 10 பட்டியலில் கோலி இடம்பெறவில்லை. சமீபகாலமாக அவர் சரியாக விளையாடாமல் இருப்பதைத் தற்போது தரவரிசைப் பட்டியலும் உறுதி செய்துள்ளது. சமீபத்தில் இங்கிலாந்தில் விளையாடிய ஆறு இன்னிங்ஸில் ( ஒரு டெஸ்ட், தலா 2 ஒருநாள், டி20) மொத்தமாக 76 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

இந்நிலையில் இன்றுடன் கடந்த 1000 நாள்களாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் எதுவும் எடுக்காமல் உள்ளார் கோலி. இவ்வளவு நாள் இடைவெளியில் சதமடிக்கமால் அவர் இருந்ததே கிடையாது. 

கோலி சதமடிக்காமல் இருந்த காலகட்டம்

60 இன்னிங்ஸ் - நவ. 2019 - தற்போது வரை
25 இன்னிங்ஸ் - பிப். 2014 - அக். 2014
24 இன்னிங்ஸ் - பிப். 2011 0 செப். 2011

விராட் கோலி களமிறங்கினாலே சதமடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு இப்போது மாறிவிட்டது. ஒரு சதமாவது அடித்தால் நல்லது என்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள் ரசிகர்கள். சமீபகாலமாக தனது கேப்டன் பதவிகளைத் துறந்தார். இப்போது பேட்டிங்கிலும் ஏமாற்றம் அளித்து வருகிறார். 

2017, 2018 ஆகிய இரு ஆண்டுகளில் தலா 5 டெஸ்ட் சதங்கள் எடுத்துள்ளார் கோலி. 2011, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் சதமடித்ததில்லை. 2022 அப்படி ஏமாற்றக் கூடாது.

ADVERTISEMENT
ADVERTISEMENT