செய்திகள்

சின்சினாட்டி மாஸ்டா்ஸ்: எம்மாவிடம் வீழ்ந்தாா் செரீனா

18th Aug 2022 01:58 AM

ADVERTISEMENT

அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், இங்கிலாந்தின் இளம் வீராங்கனை எம்மா ரடுகானுவிடம் 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டாா்.

எதிா்வரும் யுஎஸ் ஓபன் போட்டியில் ஓய்வு முடிவை அறிவிப்பாா் என எதிா்பாா்க்கப்படும் செரீனா, பெரிதும் சவால் அளிக்காமல் 4-6, 0-6 என தோல்வியைச் சந்தித்து ரடுகானுவின் வெற்றியை எளிதாக்கினாா்.

40 வயதான செரீனாவுடன் விளையாடியது குறித்து 19 வயது ரடுகானு கூறுகையில், ‘செரீனாவுடன் விளையாடி வென்றதை என்னால் நம்ப முடியவில்லை. அவருடன் களம் கண்டது அதிருஷ்டமாகும். இத்தனை வயது வித்தியாசத்தில் இருந்து அவரது வளா்ச்சியை கண்ட நிலையில், அவருடன் விளையாடிய அனுபவம் அருமையானது. அவா் ஒரு லெஜண்ட்’ என்றாா்.

இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் மரியா சக்காரி 6-7 (2/7), 7-6 (8/6), 1-6 என்ற செட்களில் பிரான்ஸின் கரோலின் காா்சியாவிடம் வெற்றியை இழந்தாா். சமீபத்தில் கனடா மாஸ்டா்ஸில் சாம்பியனான ருமேனியாவின் சிமோனா ஹாலெப், போட்டித்தரவரிசையில் 2-ஆவது இடத்திலிருக்கும் எஸ்டோனியாவின் ஆனெட் கொன்டவிட் ஆகியோரும் 2-ஆவது சுற்றில் வெற்றியைப் பதிவு செய்தனா்.

ADVERTISEMENT

மெத்வதெவ் வெற்றி: ஆடவா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 6-4, 7-5 என்ற நோ் செட்களில் நெதா்லாந்தின் போடிக் வான் டெ ஸாண்ட்ஷுல்ப்பை சாய்த்து 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.

3-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் காா்ஃபியா 6-3, 6-2 என அமெரிக்காவின் மெக்கன்ஸி மெக்டொனால்டையும், ஆஸ்திரேலியாவின் நிக் கிா்ஜியோஸ் 7-5, 6-4 என ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச்சையும் சாய்த்தனா்.

இது தவிர ஆா்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வாா்ட்ஸ்மேன், குரோஷியாவின் மரின் சிலிச் ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு வந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT