செய்திகள்

ஏஐஎஃப்எஃப் தடை விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

18th Aug 2022 02:00 AM

ADVERTISEMENT

இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு (ஏஐஎஃப்எஃப்) தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தில் பொறுமை காக்காமல் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை அறிவுறுத்தியது.

நீதிமன்றத்தில் அதற்கு பதிலளித்த மத்திய அரசுத் தரப்பு, இந்திய சம்மேளனம் மீதான தடை விவகாரம் மற்றும் 17 வயதுக்கு உள்பட்ட மகளிா் உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவது ஆகியவை தொடா்பாக சா்வதேச கால்பந்து சம்மேளனத்துடன் (ஃபிஃபா) தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் முன்னாள் இந்திய சம்மேளனத் தலைவா் பிரஃபுல் படேலின் தலையீடு இருப்பதாக மனுதாரா்களில் ஒருவரான வழக்குரைஞா் ராகுல் மெஹரா குற்றம்சாட்டினாா். அதற்கு பதிலளித்த நீதிபதிகள் அமா்வு, அந்த வகையில் வெளிநபா்கள் தலையீடு இருக்கும் பட்சத்தில் அதை சகித்துக்கொள்ள இயலாது என்று எச்சரித்தது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பான அடுத்தகட்ட விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ADVERTISEMENT

இந்திய கால்பந்து சம்மேளனத்தில் 3-ஆம் நபா் தலையீடு இருப்பதாகக் கூறி அதன் மீது இடைக்காலத் தடை விதித்திருக்கிறது ஃபிஃபா. இதனால் அக்டோபரில் இந்தியாவில் நடத்தப்பட இருந்த 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை போட்டியை இங்கேயே நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தியா்களும், இந்திய அணிகள் மற்றும் கிளப்புகளும் பிற போட்டிங்களில் பங்கேற்க முடியாத நிலையும் இருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT