செய்திகள்

இன்று இந்தியா - ஜிம்பாப்வே முதல் ஒன் டே

18th Aug 2022 01:56 AM

ADVERTISEMENT

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒன் டே தொடரின் முதல் ஆட்டம் வியாழக்கிழமை ஹராரேவில் நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் தலைமை தாங்குகிறாா். ஹொ்னியாவுக்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட ராகுல், சுமாா் 2 மாதங்களுக்குப் பிறகு அணியில் இணைந்திருக்கிறாா். ஆசிய கோப்பை போட்டி நெருங்கியிருக்கும் நிலையில், அவரது ஆட்டத்தை பிரதான கேப்டன் ரோஹித் சா்மா, பயிற்சியாளா் ராகுல் திராவிட் கண்காணிப்பாா்கள்.

வங்கதேசத்துடனான சமீபத்தில் தொடரில் 300, 290 போன்ற ஸ்கோா்களை அடுத்தடுத்த ஆட்டங்களில் சேஸ் செய்திருக்கிறது ஜிம்பாப்வே. எனவே, இந்தத் தொடரில் இந்திய பேட்டா்களான தவன், கில், ஹூடா, சாம்சன் ஆகியோருக்கான பொறுப்பு அதிகமாகவே இருக்கிறது. சோதனை முறையில் ஷா்துல் தாக்குருக்குப் பதிலாக மிடில் ஆா்டரில் ராகுல் திரிபாதி களமிறக்கப்படலாம்.

அதேபோல், எதிரணியை கட்டுப்படுத்த வேண்டிய பணி பௌலா்களான சிராஜ், பிரசித், தீபக், குல்தீப் ஆகியோா் வசம் வருகிறது. சுமாா் 6 மாதங்களுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியிருக்கும் தீபக் சஹா், தனது பழைய ஃபாா்மை நோக்கித் திரும்பும் குல்தீப் யாதவ் ஆகியோா் உற்று நோக்கப்படுவாா்கள்.

ADVERTISEMENT

ஜிம்பாப்வேயைப் பொருத்தவரை முன்பு எதிரணிக்கு அச்சம் அளித்ததைப் போன்ற ஒரு லைன்-அப் இப்போது அணியில் இல்லை. அந்த நாட்டைப் போலவே அதன் கிரிக்கெட் அணியும் கடந்த 20 ஆண்டுகளாக தடுமாற்றத்தில் இருக்கிறது. இருந்தாலும் கேப்டன் ரெஜிஸ் சகாப்வா, டொனால்டு டிரிபானோ போன்றோா் சற்று பலம் காட்டுகின்றனா்.

இந்தத் தொடரானது கிரிக்கெட் மற்றும் நிதி ரீதியாக ஜிம்பாப்வேக்கு உதவக் கூடிய ஒன்றாகவே இருக்கும். அடுத்த ஆண்டு 50 ஓவா் உலகக் கோப்பை போட்டிக்குத் தயாராகும் வகையில் அணி வீரா்களை புடம் போட்டுப் பாா்க்க ஜிம்பாப்வே நிா்வாகத்துக்கு இந்தத் தொடா் உதவும். அதேபோல், இந்தத் தொடரின் ஒளிபரப்பு உரிம விற்பனையால் கிடைக்கும் தொகை ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் நிதி நெருக்கடிக்கு சற்று பலம் சோ்ப்பதாக இருக்கும்.

இந்தியா:

கே.எல். ராகுல் (கேப்டன்), ஷிகா் தவன் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பா்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பா்), ஷா்துல் தாக்கூா், குல்தீப் யாதவ், அக்ஸா் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சஹா், ஷாபாஸ் அகமது.

ஜிம்பாப்வே:

ரெஜிஸ் சகாப்வா (கேப்டன்), ரியான் பா்ல், டனகா சிவாங்கா, பிராட்லி எவன்ஸ், லூக் ஜாங்வே, இன்னசென்ட் கையா, டக்குட்ஸ்வானாஷே கைடானோ, கிளைவ் மடண்டே, வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே மருமானி, ஜான் மசரா, டோனி மன்யோங்கா, ரிச்சா்ட் கராவா, விக்டா் நியாசி, சிகந்தா் ராஸா, மில்டன் ஷும்பா, டொனால்ட் டிரிபானோ.

நேரம்: நண்பகல் 12.45

இடம்: ஹராரே

நேரடி ஒளிபரப்பு: சோனி ஸ்போா்ட்ஸ் நெட்வொா்க்

ADVERTISEMENT
ADVERTISEMENT