செய்திகள்

கில், தவான் அதிரடி: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

DIN

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவான் மற்றும் ஷுப்மன் கில் அதிரடியால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஹராரேவில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கே.எல். ராகுல், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷுப்மன் கில், இஷான் கிஷன், சிராஜ் போன்றோர் இடம் பெற்றனர். இந்திய அணிக்காகக் கடந்த பிப்ரவரி மாதம் கடைசியாக விளையாடிய தீபக் சஹார், காயத்திலிருந்து மீண்டு வந்து இந்திய அணியில் இடம் பெற்றார்.

ஜிம்பாப்வே அணி ஆரம்பம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்டது. முதல் நான்கு பேட்டர் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். இதனால் 101. ஓவர்களில் 31 ரன்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளை இழந்தது. தீபக் சஹார் சிறப்பாகப் பந்துவீசி முதல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஜிம்பாப்வே அணி 25 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்து தடுமாறியது. 

பின்வரிசை வீரர்கள் இருவர் அதிக ரன்கள் எடுத்து ஜிம்பாப்வேவுக்கு ஓரளவு நல்ல ஸ்கோரைப் பெற்றுத் தந்தார்கள். பிராட் எவான்ஸ் - ரிச்சர்ட் 9-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்து அசத்தினார்கள். இறுதியில் ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிராட் எவான்ஸ் 33 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ரெஜிஸ் 35, ரிச்சர்ட் 34 ரன்கள் எடுத்தார்கள். இந்தியப் பந்துவீச்சாளர்களில் தீபக் சஹார், பிரசித் கிருஷ்ணா, அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

இதனையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். இந்த ஜோடி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க ஜிம்பாப்வே வீரர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் பலனிளிக்கவில்லை. 

சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இதன் மூலம் இந்திய அணி 30.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது. ஷுப்மன் கில் 72 பந்துகளில் 82 ரன்களும், ஷிகர் தவான் 113 பந்துகளில் 81 ரன்களும் குவித்து களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT