செய்திகள்

ஐசிசி அட்டவணையும் இந்திய அணியும்: முக்கிய அம்சங்கள்

17th Aug 2022 04:36 PM

ADVERTISEMENT

 

2023-27 ஆண்டுகளுக்கான ஆடவர் கிரிக்கெட் அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில்அதிகமான சர்வதேச ஆட்டங்களில் பங்கேற்கும் அணிகளில் இந்தியாவும் ஒன்று. 

* 2023-27 காலக்கட்டத்தில் இந்திய அணி 141 சர்வதேச ஆட்டங்களில் விளையாடுகிறது. (உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, ஆசியக் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று என ஐசிசி மற்றும் முக்கியப் போட்டிகளின் இந்திய அணியின் ஆட்டங்கள் இதில் சேர்க்கப்படவில்லை.) இந்தியாவை விடவும் வங்கதேசம் (150), மேற்கிந்தியத் தீவுகள் (147) அதிக சர்வதேச ஆட்டங்களில் விளையாடுகின்றன. 

இந்த நான்கு ஆண்டுகளில் இந்திய அணி (ஐசிசி போட்டிகளைத் தவிர) 38 டெஸ்டுகள், 42 ஒருநாள், 61 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது.

ADVERTISEMENT

2023-27: டி20

* இந்திய அணி 61 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது (உலகக் கோப்பை, ஆசியக் கோப்பைப் போட்டிகள் இதில் சேர்க்கப்படவில்லை). மேற்கிந்தியத் தீவுகளுக்கு அடுத்ததாக இந்திய அணிதான் அதிக டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது.

* இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட 8 டி20 தொடர்களில் பங்கேற்கிறது. 

2024-27 இந்தியா விளையாடும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர்கள்

5 டி20 vs ஆஸ்திரேலியா 2023 நவம்பர் 
5 டி20 vs இங்கிலாந்து 2025 ஜனவரி 
5 டி20 vs ஆஸ்திரேலியா 2025 அக்டோபர் 
5 டி20 vs தெ.ஆ. 2025 நவம்பர்
5 டி20 vs நியூசிலாந்து 2026 ஜனவரி 
5 டி20 vs இங்கிலாந்து 2026 ஜூலை 
5 டி20 vs மே.இ. தீவுகள் 2026 செப்டம்பர் 
5 டி20 vs நியூசிலாந்து 2026 அக்டோபர் 

* ஐபிஎல், தி ஹண்ட்ரட், பிபிஎல் ஆகிய டி20 லீக் போட்டிகளுக்காக ஏப்ரல், மே, ஆகஸ்ட், ஜனவரி மாதங்களில் மிகக்குறைவான சர்வதேச ஆட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

2023-27: ஒருநாள்

* இருநாடுகள் பங்கேற்கும் 42 ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியா தான் குறைந்த ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. (எனினும் 2023, 2027 ஆண்டுகளில் இரு ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. மேலும் 2025-ல் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை நடைபெறவுள்ளது. அதனுடன் சேர்த்தால் ஓரளவு அதிக ஒருநாள் ஆட்டங்களில் இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கலாம்.) ஒருநாள் தொடர்களில் அதிகபட்சமாக 3 ஆட்டங்களில் மட்டுமே இந்திய அணி விளையாடுகிறது. 

2023-27: டெஸ்ட்

* 38 டெஸ்டுகளில் விளையாடுகிறது இந்தியா. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக இந்திய அணி தான் அதிக டெஸ்டுகளில் விளையாடுகிறது.

* 2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச ஆகிய அணிகளுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் அணி, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராகவும் விளையாடவுள்ளது. 

2025-27 டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் அணி, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராகவும் விளையாடவுள்ளது. 

* இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 1992-க்குப் பிறகு முதல்முறையாக 5 ஆட்டங்களைக் கொண்ட இரு டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளன. 2024-25-ல் இந்தியாவின் ஆஸ்திரேலியச்  சுற்றுப்பயணத்தில் இரு அணிகளும் 5 டெஸ்டுகளில் விளையாடவுள்ளன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என இரு நாடுகளுக்கும் எதிராகவும் இந்தியா தலா 5 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் இனி விளையாடும். 

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக இந்தியா விளையாடும் டெஸ்டுகள்

இந்தியாவில் 5 டெஸ்டுகள் vs இங்கிலாந்து - 2024 ஜனவரி 
ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்டுகள் vs ஆஸ்திரேலியா - 2024 நவம்பர் 
இங்கிலாந்தில் 5 டெஸ்டுகள் vs இங்கிலாந்து - 2025 ஜூன் 
இந்தியாவில் 5 டெஸ்டுகள் vs ஆஸ்திரேலியா - 2027 ஜனவரி 

*
* இந்த நான்கு வருடங்களில் 5 வெள்ளைப் பந்து ஐசிசி போட்டிகள் நடைபெறவுள்ளன. 2023-ல் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை, 2024-ல் மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை, 2025-ல் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை, 2026-ல் இந்தியா, இலங்கையில் டி20 உலகக் கோப்பை, 2027-ல் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமிபியாவில் ஒருநாள் உலகக் கோப்பை என ரசிகர்களை மகிழ்விக்க முக்கியமான ஐசிசி போட்டிகள் ஒவ்வொரு வருடமும் நடைபெறவுள்ளன. இதுதவிர இரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

* இந்த நான்கு வருடங்களில் பாகிஸ்தானுடன் எந்தவித தொடர்களிலும் இந்தியா விளையாடவில்லை. உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய போட்டிகளில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் மோதலைக் காண முடியும். டெஸ்டில் அதுவும் வாய்ப்பில்லை. ஒருவேளை இரு அணிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்தால் அதைக் காணும் வாய்ப்பு கிடைக்கும். 

2023-27 கிரிக்கெட் அட்டவணை

Tags : FTP India
ADVERTISEMENT
ADVERTISEMENT