செய்திகள்

இரு உலகக் கோப்பைகளை வெல்ல வேண்டும்: ரஸ்ஸல் விருப்பம்

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக இரு உலகக் கோப்பைகளை வெல்ல ஆசைப்படுவதாக ஆல்ரவுண்டர் ரஸ்ஸல் கூறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடாமல் டி20 லீக் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் குறித்து தனது அதிருப்தியைச் சமீபத்தில் வெளிப்படுத்தினார் அந்த அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ்.

சமீபத்திய மே.இ. தீவுகள் அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களில் பிரபல வீரர் ரஸ்ஸல் இடம்பெறவில்லை. 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு அவர் இந்தப் பக்கமே திரும்பவில்லை. தற்போது இங்கிலாந்தில் தி ஹன்ட்ரெட் போட்டியில் விளையாடி வருகிறார். நரைன் எப்போது விளையாடுவார் என யாருக்கும் தெரியவில்லை. உடற்தகுதித் தேர்வுகளுக்கு எவின் லூயிஸ், ஒஷானே தாமஸ் வரவில்லை.ஷெல்டன் காட்ரெல், ராஸ்டன் சேஸுக்குக் காயம். தனிப்பட்ட காரணங்களுக்காக ஃபேபியன் ஆலன் விளையாடவில்லை. டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில் சரியான வீரர்களைக் களமிறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது மே.இ. தீவுகள் அணி. இந்நிலை பற்றி மே.இ. தீவுகளின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் கூறியதாவது:

இது வேதனையாக உள்ளது. எங்களால் வேறு என்ன செய்ய முடியும்? உங்கள் நாட்டுக்காக விளையாடுங்கள் என அவர்களிடம் நான் சென்று கெஞ்ச முடியாது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாட ஆசைப்பட்டால் அதற்குத் தயாராக இருக்கவேண்டும். காலம் மாறிவிட்டது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு விளையாடுவதை விடவும் வேறு அணிகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் அளித்தால் நிலைமையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.

சிம்மன்ஸின் விமர்சனத்துக்குப் பதில் அளித்து இன்ஸ்டகிராமில் ரஸ்ஸல் கூறியதாவது:

இது வரும் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் அமைதி காக்கப் போகிறேன் என்று கூறினார்.

இந்நிலையில் தி ஹன்ட்ரெட் போட்டியின்போது டேரன் சமிக்கு அளித்த பேட்டியில் ரஸ்ஸல் கூறியதாவது:

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாட எப்போதும் விருப்பப்படுவேன். சில நிபந்தனைகள் சரிவரவில்லை என்றால்... என்னுடைய நிபந்தனைகளை மே.இ. தீவுகள் அணி நிர்வாகம் மதிக்கவேண்டும். அது அப்படித்தான். எங்களுக்குக் குடும்பம் உண்டு. எங்கள் விளையாட்டு வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என்னால் மீண்டும் முதலில் இருந்து விளையாட ஆரம்பிக்க முடியாது. எனக்கு வயது 34. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக இரு உலகக் கோப்பைகளையாவது வெல்ல வேண்டும் என விரும்புகிறேன். டி20 லீகில் இரு சதங்கள் எடுத்துள்ளேன். அந்த இரு சதங்களும் மே.இ. தீவுகள் அணிக்காக எடுத்திருக்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் அந்தச் சதங்கள் எடுக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT