செய்திகள்

டி20 உலகக் கோப்பையில் விளையாட நினைத்தேன்...: ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்

16th Aug 2022 03:43 PM

ADVERTISEMENT

 

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகுவதாகப் பிரபல அயர்லாந்து கிரிக்கெட் வீரர் கெவின் ஓ பிரையன் அறிவித்துள்ளார்.

38 வயது கெவின் ஓ பிரையன் அயர்லாந்து அணிக்காக 2018 முதல் 2019 வரை 3 டெஸ்டுகள், 153 ஒருநாள், 110 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடினார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக கெவின் ஓ பிரையன் அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில் அவர் கூறியதாவது:

ADVERTISEMENT

என் நாட்டுக்காக 16 வருடங்களாக 389 ஆட்டங்களில் விளையாடிய பிறகு என்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறேன். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டியுடன் ஓய்வு பெற எண்ணியிருந்தேன். ஆனால் கடந்த உலகக் கோப்பைக்குப் பிறகு அயர்லாந்து அணிக்கு நான் தேர்வாகவில்லை. தேர்வுக்குழுவினரும் நிர்வாகமும் வேறு திசையில் செல்கிறார்கள் என எண்ணுகிறேன். அடுத்ததாக இளம் வீரர்களுக்குப் பயிற்சியளிப்பதில் ஆர்வமாக உள்ளேன் என்றார். 

கெவின் ஓ பிரையன் என்றால் 2011 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் விளையாடியது தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அயர்லாந்து அணி 106/4 எனத் தடுமாறிக் கொண்டிருந்தபோது களமிறங்கினார் கெவின் ஓ பிரையன். அதன் பிறகு நிலைமை 111/5 என மேலும் மோசமானது. 327 ரன்கள் இலக்கு. ஆனால் அதிரடியாக விளையாடி சூழலை மாற்றினார் கெவின் ஓ பிரையன். 6 சிக்ஸர்களுடன் 50 பந்துகளில் சதமடித்தார். உலகக் கோப்பை வரலாற்றில் விரைவாக அடிக்கப்பட்ட சதம் அது. ஆண்டர்சன், பிராட், ஸ்வான் அடங்கிய இங்கிலாந்துப் பந்துவீச்சைத் திறமையாக எதிர்கொண்டு 3 விக்கெட் வித்தியாசத்தில் மறக்க முடியாத வெற்றியைப் பெற்றது அயர்லாந்து. 63 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் கெவின் ஓ பிரையன். உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை விரட்டிய பெருமையை அடைந்தது அயர்லாந்து. 

ADVERTISEMENT
ADVERTISEMENT