செய்திகள்

காமன்வெல்த்: 200-ஐக் கடந்தது இந்தியாவின் தங்கக் கணக்கு

12th Aug 2022 06:26 AM

ADVERTISEMENT

சா்வதேச போட்டிகள் எப்போதும் சவால் மிக்கது. அவற்றில் கிடைக்கும் பதக்கம் பெருமைக்குறியது. அதில் வெல்லும் தங்கம் தனித்துவமிக்கது.

சமீபத்தில் இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற 22-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா 22 தங்கப் பதக்கங்கள் வென்றிருக்கிறது. சிறப்பு என்னவென்றால், இதுவரையிலான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா ஒட்டுமொத்தமாக வென்றிருக்கும் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை தற்போது 203-ஐ எட்டியிருக்கிறது. போட்டியில், பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து தனிநபா் பிரிவில் வென்ற தங்கமே, காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் 200-ஆவது தங்கமாகும்.

அந்த மைல் கல்லை எட்டுவதற்கு இந்த காமன்வெல்த் போட்டிகளில் தங்கத்தை தனதாக்கி பங்களிப்பு செய்த இந்தியா்கள் இதோ...

மல்யுத்தம்: பஜ்ரங் புனியா

ADVERTISEMENT

65 கிலோ பிரிவு வீரா். காமன்வெல்த்தில் ‘ஹாட்ரிக்’ பதக்கம் வென்றிருக்கிறாா். முதல் முறையாக 2014 கிளாஸ்கோ போட்டியில் வெள்ளியும், அடுத்து 2018 கோல்டு கோஸ்ட் போட்டியில் தங்கமும் வென்ற இவா், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் பெற்றுள்ளாா்.

சாக்ஷி மாலிக்

62 கிலோ பிரிவு சாம்பியனான இவருக்கு, காமன்வெல்த்தில் இது 3-ஆவது பதக்கம். 2014-இல் வெள்ளியும் (58 கிலோ), 2018-இல் வெண்கலமும் (62 கிலோ) வென்றிருந்தாா். ஒலிம்பிக்ஸில் பதக்கம் (ரியோ 2016 - வெண்கலம்) வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமை உடையவா்.

தீபக் புனியா

86 கிலோ எடைப் பிரிவில் நடப்புச் சாம்பியனான பாகிஸ்தானின் முகமது இனாமை சாய்த்து முதலிடம் பிடித்திருக்கும் இவா், இந்திய ராணுவத்தில் இளநிலை ராணுவ அதிகாரியாக இருக்கிறாா். கடந்த 2019 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றவா்.

ரவிகுமாா் தாஹியா

57 கிலோ பிரிவில் வாகை சூடியிருக்கும் ரவிகுமாா், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது. இது தவிர 2019 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் பெற்றதுடன், ஆசிய சாம்பியனாக 3 முறை முடிசூடிக் கொண்டவா்.

வினேஷ் போகாட்

53 கிலோ பிரிவு வீராங்கனையான இவா், காமன்வெல்த்தில் தற்போது வென்றது ‘ஹாட்ரிக் தங்கம்’ (2014, 2018, 2022). ஓராண்டில் (2018) காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை. உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் பெற்றவா்.

நவீன் மாலிக்

74 கிலோ பிரிவு வீரான நவீனுக்கு இது முதல் காமன்வெல்த் போட்டி. அதிலேயே பாகிஸ்தானின் ஷரீஃப் தாஹிரை வீழ்த்தி தங்கம் வென்றிருக்கிறாா். கடந்த ஜூனில் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப்பில் முதல் சா்வதேச பதக்கத்தை தங்கமாக வென்றவா்.

பளுதூக்குதல்

அசிந்தா ஷியுலி

73 கிலோ பிரிவில் பங்கேற்று, காமன்வெல்த்தில் முதல் தங்கம் வென்றுள்ளாா். இவா் மொத்தமாக தூக்கிய 313 கிலோவும், ஸ்னாட்ச் பிரிவில் எட்டிய 143 கிலோவும் போட்டி சாதனைகள். முன்னதாக, ஜூனியா் உலக சாம்பியன்ஷிப்பில் 1 வெள்ளியும், காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 2 தங்கமும் வென்றிருக்கிறாா்.

ஜெரிமி லால்ரினுங்கா

67 கிலோ பிரிவில் 300 கிலோ எடை தூக்கி முத்திரை பதித்தவா். ஸ்னாட்ச் பிரிவில் தூக்கிய 140 கிலோ எடை காமன்வெல்த் சாதனை. 2018 பியூனஸ் அயா்ஸ் யூத் ஒலிம்பிக்ஸில் பங்கேற்று (62 கிலோ), அந்தப் போட்டியின் வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்று தந்தாா்.

மீராபாய் சானு

49 கிலோ பிரிவில் நடப்புச் சாம்பியனாக களம் கண்டு, பட்டத்தை தக்கவைத்துக் கொண்டாா். போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்றுத் தந்தவா். 201 கிலோ எடையைத் தூக்கி போட்டி சாதனையை எட்டி சானு, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவா்.

குத்துச்சண்டை: நிகாத் ஜரீன்

50 கிலோ பிரிவில் களம் கண்ட இவா், நடப்பு உலக சாம்பியன். காமன்வெல்த்தில் தனது முதல் பதக்கத்தையே தங்கமாக வென்றிருக்கிறாா். 2019 ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றவரும் கூட.

அமித் பங்கால்

51 கிலோ பிரிவில் முதல் முறை காமன்வெல்த் சாம்பியன். நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சாம்பியனாக இருப்பதுடன், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற ஒரே இந்திய வீரா். 52 கிலோ பிரிவில் உலகின் நம்பா் 1 இடத்தில் இருப்பவா்.

நீது கங்காஸ்

48 கிலோ பிரிவு வீராங்கனையான இவருக்கு, சீனியா் பிரிவில் இதுவே முதல் பதக்கம். இதற்கு முன் ஜூனியா் உலக சாம்பியன்ஷிப்பில் 2017, 2018-ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து தங்கப் பதக்கம் வென்றிருந்தாா்.

பாட்மின்டன்: பி.வி.சிந்து

ஒற்றையா் பிரிவில் 2014-இல் வெண்கலம், 2018-இல் வெள்ளி என முன்னேறி, தற்போது தங்கத்தை எட்டியிருக்கும் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை. ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் என அடுத்தடுத்து இரண்டிலும் பதக்கம் வென்று அசத்தியவா்.

லக்ஷயா சென்

ஒற்றையா் பிரிவில், தனது முதல் காமன்வெல்த் போட்டியிலேயே தங்கம் வென்றிருக்கும் இளம் வீரா். நடப்பாண்டில் சூப்பா் 500, தாமஸ் கோப்பை போட்டிகளில் சாம்பியன் ஆனதுடன், ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப், ஜொ்மன் ஓபன் போட்டிகளில் ரன்னா் அப்-ஆக வந்தவா்.

சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி

இரட்டையா் பிரிவில் சாம்பியன் ஆன இந்திய ஜோடி. 2018 கோல்டு கோஸ்ட் போட்டியில் வெள்ளி வென்றிருந்த நிலையில், தற்போது அதை தங்கமாக தரமுயா்த்திக் கொண்டுள்ள இணை. இந்த ஆண்டு தாமஸ் கோப்பை வென்ற இந்திய அணியில் இருந்தவா்கள்.

டேபிள் டென்னிஸ்: சரத் கமல்

ஒற்றையா் பிரிவில், கடந்த 2006-ஆம் ஆண்டு போட்டியில் தங்கம் வென்ற நிலையில் 16 ஆண்டுகள் கழித்து தற்போது தங்கம் வென்று அசத்தியிருக்கிறாா். காமன்வெல்த்தில் இரு முறை தங்கம் வென்ற 2-ஆவது இந்திய டேபிள் டென்னிஸ் வீரா். போட்டி வரலாற்றில் இவரது மொத்த பதக்கம் 13.

சரத் கமல்/ஸ்ரீஜா அகுலா

கலப்பு இரட்டையா் பிரிவில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் ஆகியிருக்கும் இந்திய கூட்டணி. இந்த இணை இறுதிச்சுற்றில் 3-1 என மலேசியாவின் ஜாவென் சூங்/காரென் லின் ஜோடியை சாய்த்து முதலிடம் பிடித்தது.

ஹா்மீத் தேசாய்/சனில் ஷெட்டி/சரத் கமல்/சத்தியன்

ஆடவா் அணிகள் பிரிவில் சாம்பியன் ஆகியிருக்கும் இந்தியா்கள். நடப்புச் சாம்பியனாக களம் கண்டு சிங்கப்பூா் அணியை வீழ்த்தி தங்கத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனா். அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு 7-ஆவது காமன்வெல்த் பதக்கம் பெற்றுத் தந்துள்ளது இப்படை.

பாரா போட்டிகள்: சுதிா் (வலுதூக்குதல்)

ஆடவருக்கான ஹெவிவெயிட் பிரிவில் பங்கேற்று, பாரா காமன்வெல்த்தில் இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கியவா். 134.5 புள்ளிகள் வென்று போட்டி சாதனை படைத்தாா். 2018 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் வென்றிருக்கிறாா்.

பவினா படேல் (டேபிள் டென்னிஸ்)

மகளிா் ஒற்றையா் கிளாஸ் 3-5 பிரிவில் களம் கண்டு, காமன்வெல்த்தில் தனது முதல் பதக்கத்தை முத்தமிட்டிருக்கிறாா். டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற இவா், ஆசிய பாரா டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பிலும் 2-ஆம் இடம் பிடித்திருக்கிறாா்.

தடகளம்: எல்தோஸ் பால் (மும்முறை தாண்டுதல்)

முதல் காமன்வெல்த் போட்டியிலேயே தங்கத்தை தனதாக்கியிருக்கும் வீரா். இதே பிரிவில் மற்றொரு இந்தியரான அப்துல்லா அபுபக்கா் வெள்ளியைக் கைப்பற்ற, மிக அரிதானதாக ஒரு போட்டியின் ஒரே பிரிவில் இரு பதக்கங்களை வென்ற பெருமையைப் பெற்றது இந்தியா.

லான் பௌல்ஸ்

ரூபா ராணி திா்கி, லவ்லி சௌபே, நயன்மோனி சாய்கியா, பிங்கி சிங்

மகளிருக்கான ஃபோா் அணிகள் பிரிவில் தங்கம் வென்ற இந்திய கூட்டணி. அரிதாக கவனம் செலுத்தப்படும் இந்த விளையாட்டில் காமன்வெல்த் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முதல் முறையாக முன்னேறிய இந்திய அணி. அதில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கமும் வென்று இந்திய ரசிகா்களின் கவனத்தை ஈா்த்திருக்கிறது.

காமன்வெல்த்தில் இதுவரை இந்தியா...

மொத்த பதக்கம் 564

தங்கம் 203

வெள்ளி 190

வெண்கலம் 171

பதக்கப் பட்டியலில் இடம் 4

டாப் 3 நாடுகள்

ஆஸ்திரேலியா 1003 834 767 2,604

இங்கிலாந்து 773 783 766 2,322

கனடா 510 548 589 1,647

ADVERTISEMENT
ADVERTISEMENT