2023 ஜனவரி மாதம் ஆறு அணிகள் பங்கேற்கும் புதிய டி20 லீக் போட்டியை சூப்பர் ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். ஒரு மாதம் வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் 33 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு அணியிலும் 17 வீரர்கள் இடம்பெறுவார்கள்.
தெ.ஆ. டி20 லீக் போட்டியில் பங்கேற்கும் ஆறு அணிகளையும் ஐபிஎல் உரிமையாளர்கள் விலைக்கு வாங்கியுள்ளார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜோஹன்னஸ்பர்க் அணியையும் மும்பை இந்தியன்ஸ் - கேப் டவுன் அணியையும் சன் டிவியின் சன் ரைசர்ஸ் - போர்ட் எலிசபெத் அணியையும் லக்னெள - டர்பன் அணியையும் ராஜஸ்தான் ராயல்ஸ் - பார்ல் அணியையும் தில்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஜிண்டால் செளத் வெஸ்ட் ஸ்போர்ட்ஸ் - பிரிடோரியா அணியையும் ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளன. தென்னாப்பிரிக்க நிறுவனங்கள் ஏலத்தில் போட்டியிட்டாலும் அதிக தொகையை முன்வைத்து ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் தெ.ஆ. டி20 லீக் போட்டியின் அணிகளைப் பெற்றுள்ளார்கள். இப்போட்டியில் ஒவ்வொரு அணியிலும் நான்கு வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சிஎஸ்கே அணி முதல்முறையாக வெளிநாட்டு லீக் போட்டியில் ஓர் அணியை விலைக்கு வாங்கியுள்ளது. தெ.ஆ. டி20 லீக் போட்டியின் தலைவராக முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் செயல்படுவார்.
இந்நிலையில் ஏலத்துக்கு முன்பு வீரர்களைத் தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ள இப்போட்டியில் ஈடுபடவுள்ள ஐபிஎல் அணிகள்.
கேப் டவுன் அணியை விலைக்கு வாங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், எம்.ஐ. கேப் டவுன் (மை கேப்டவுன் என அழைக்கவேண்டும்) என அணிக்குப் பெயர் சூட்டியுள்ளது. அந்த அணி தான் தேர்வு செய்துள்ள வீரர்கள் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. ரஷித் கான், லிவிங்ஸ்டன், சாம் கரண், ரபாடா, பிரேவிஸ் என பிரபல டி20 வீரர்களை அந்த அணி தேர்வு செய்துள்ளது. மேலும் தி ஹண்ட்ரட் போட்டியில் முதல் சதத்தை அடித்த வில் ஸ்மீடையும் தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரேவிஸ் ஏற்கெனவே ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரராக உள்ளார்.
டி20 லீகின் விதிமுறைகளின்படி ஒவ்வொரு அணியும் ஏலத்துக்கு முன்பு மூன்று வெளிநாட்டு வீரர்கள், ஒரு தெ.ஆ. வீரர், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத ஒரு தெ.ஆ. வீரர் என ஐந்து வீரர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
ஆமீர் கானின் புதிய படத்தைப் பாராட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்
தி ஹண்ட்ரட் போட்டியில் முதல் சதத்தை அடித்த வீரர் (விடியோ)
மே.இ. தீவுகள் அணிக்காக விளையாடுங்கள் எனக் கெஞ்ச முடியாது: பயிற்சியாளர் சிம்மன்ஸ்
சென்னை செஸ் ஒலிம்பியாடில் தானியா சச்தேவ் (படங்கள்)
டி20: மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்திய நியூசிலாந்து