செய்திகள்

ஐஎல்டி20 போட்டியில் இணைந்த பிரபல வீரர்கள்

11th Aug 2022 05:40 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டிக்கு இணையான அல்லது 2-வது சிறந்த டி20 லீக் போட்டிக்கான அந்தஸ்தைப் பெற இரு அணிகள் கடுமையாகப் போட்டியிட்டு வருகின்றன. 

2023 ஜனவரி மாதம் ஆறு அணிகள் பங்கேற்கும் புதிய டி20 லீக் போட்டியை சூப்பர் ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். ஒரு மாதம் வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் 33 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு அணியிலும் 17 வீரர்கள் இடம்பெறுவார்கள். முதல் வருடம் 34 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இருமுறை விளையாடும்.

ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஒரு புதிய டி20 லீக் போட்டி அதே 2023 ஜனவரியில் தொடங்கப்படவுள்ளது. சர்வதேச லீக் டி20 என்கிற ஐஎல்டி20 போட்டியில் அதிகச் சம்பளம் தரப்படுவதால் அதில் இணைந்துகொள்ள பிரபல வீரர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ADVERTISEMENT

ரிலையன்ஸ் (ஐபிஎல் மும்பை அணி நிர்வாகம்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கேப்ரி குளோபல், ஜிஎம்ஆர், லேன்சர் கேபிடல், அதானி ஸ்போர்ட்ஸ்லைன் என ஆறு அணிகளின் உரிமையாளர்கள் வீரர்களைத் தேர்வு செய்யும் பணியில் உள்ளார்கள். இப்போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 18 வீரர்கள் இருப்பார்கள். அவர்களில் நால்வர் யூஏஇ மற்றும் இருவர் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். 

கிரோன் பொலார்ட், டுவைன் பிராவோ, நிகோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸ்ஸல், மொயீன் அலி, ஹெட்மையர், டேவிட் மலான், சுநீல் நரைன், எவின் லூயிஸ் போன்ற பிரபல வீரர்கள் ஐஎல்டி20 போட்டியில் விளையாடவுள்ளார்கள். இதனால் 2023 ஜனவரியில் டி20 லீக் ஆட்டங்களும் அதில் பங்கேற்கும் பிரபல வீரர்களும் ரசிகர்களுக்கு ஏராளமான புதிய அனுபவத்தைத் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT