செய்திகள்

இலங்கையில் பெற்ற பரிசுத்தொகையை அந்நாட்டு மக்களுக்கே திருப்பிக் கொடுத்த ஆஸி. வீரர்கள்

11th Aug 2022 04:36 PM

ADVERTISEMENT

 

சமீபத்தில் இலங்கைக்குக்குச் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது. டி20 தொடரை வென்றது. ஒருநாள் தொடரில் 2-3 எனத் தோல்வியடைந்தது. 

கடைசி ஒருநாள் ஆட்டத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸி. அணி. இலங்கையில் பல்வேறு நெருக்கடிகள் நிலவும் இச்சமயத்தில் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்த ஆஸி. வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் நன்றி தெரிவித்தார்கள். கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ஆஸி. அணிக்கு ஆதரவுக்கும் தெரிவிக்கும் விதமாக அவர்கள் நடந்துகொண்டார்கள். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆஸி. அணியின் சீருடையை அணிந்து வந்தும் ஆஸி. அணியின் கொடியைக் காண்பித்தும் நெகிழ வைத்தார்கள். மைதானத்தில் மஞ்சள் நிறத்தைப் பல இடங்களில் காண முடிந்தது. ஆஸி. வீரர்களும் இலங்கை ரசிகர்களுக்கு மைதானத்திலேயே பாராட்டு தெரிவித்தார்கள். இதையடுத்து ஆஸி. கேப்டன் ஃபிஞ்ச் கூறியதாவது: இலங்கைக்கு நாங்கள் சுற்றுப்பயணம் செய்ததில் மகிழ்ச்சியடைகிறோம். சமீபத்தில் இலங்கை தேசம் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை நாங்கள் அறிவோம். இதுவரை நாங்கள் விளையாடிய எட்டு வெள்ளைப் பந்து ஆட்டங்களும் அவர்களுக்கு மகிழ்ச்சியளித்திருக்கும் என நம்புகிறோம். எங்கள் அணியின் சீருடையை ரசிகர்கள் அணிந்து வந்தது அபாரம். இலங்கை மக்கள் அருமையான மக்கள். அவர்கள் அளிக்கும் ஆதரவுக்கு நிகராக எதுவும் இல்லை. அவர்கள் அருமையான கிரிக்கெட் ரசிகர்கள். வெறும் சப்தம் எழுப்புவதோடு நிற்க மாட்டார்கள். ஆட்டத்தில் வெளிப்படும் உணர்வுகளுடன் பயணிப்பார்கள். இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தும்போது வேறு எந்த ரசிகர்களை விடவும் அதிகமாகச் சப்தம் எழுப்பி ஆதரவளிப்பார்கள் என்றார். 

இந்நிலையில் இலங்கைச் சுற்றுப்பயணத்தில் கிடைத்த பரிசுத்தொகையை இலங்கை மக்களுக்கு அளிக்க முன்வந்துள்ளார்கள் ஆஸி. கிரிக்கெட் வீரர்கள். அவர்கள் அளித்த 25.36 லட்சத்தைக் கொண்டு யுனிசெஃப் அமைப்பு, இலங்கையிலுள்ள குழந்தைகள், குடும்பங்களுக்கு உதவி செய்யவுள்ளது. 2021-ல் கரோனாவின் 2-வது அலையினால் இந்திய மக்கள் பாதிக்கப்பட்டபோது கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு ரூ. 28.18 லட்சம் நிதியுதவி செய்தது. தற்போது இலங்கை மக்களுக்கும் நிதியுதவி செய்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்கள். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT