செய்திகள்

வரலாறு படைத்த செஸ் ஒலிம்பியாட்: தமிழக முதல்வருக்குப் பிரபல செஸ் வீராங்கனை பாராட்டு

DIN

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியைச் சிறப்பாக நடத்தி முடித்ததற்காகத் தமிழக முதல்வருக்குப் பிரபல செஸ் வீராங்கனை தானியா சச்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார். 

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. தமிழக அரசு, சா்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே), அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்) சாா்பில் ரூ.100 கோடி செலவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரம் ஃபோா் பாயிண்ட் ஷெரட்டன் ஹோட்டலில் கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கியது. ஓபன் பிரிவில் 187, மகளிா் பிரிவில் 162 நாடுகளைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். மொத்தம் 11 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. 

ஓபன் பிரிவில் அதிபன், குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹல் சரின், ருணாக் சத்வனி இடம்பெற்ற இந்திய பி அணி வெண்கலம் வென்றது. மகளிர் பிரிவில் நிறைமாத கா்ப்பிணி ஹரிகா, கொனேரு ஹம்பி, ஆா். வைஷாலி, பக்தி குல்கா்னி, தானியா சச்தேவ் ஆகியோர் இடம்பெற்ற இந்திய ஏ அணி வெண்கலம் வென்றது. 

விளையாட்டு வீரா்களின் வெற்றி, ரேட்டிங் அடிப்படையில் வழங்கப்படும் தனிநபா் பதக்கங்களில் இந்திய இளம் வீரா்கள் டி. குகேஷ், நிஹல் சரின் ஆகியோா் தங்கம் வென்றனா். ஏ அணி வீரா் அா்ஜுன் எரிகைசி வெள்ளியும் பி அணி வீரா் பிரக்ஞானந்தா வெண்கலமும் வென்றனா். மகளிா் பிரிவில் தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக், ஆா்.வைஷாலி ஆகியோர் வெண்கலம் வென்றனா். இந்திய அணியினருக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்தார்.

முதல்வருக்கு நன்றி தெரிவித்து பிரபல செஸ் வீராங்கனை தானியா சச்தேவ் ட்விட்டரில் கூறியதாவது:

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி பல காரணங்களுக்காக வரலாறு படைத்துள்ளது. செஸ் உலகை மீண்டும் ஒன்றாக இணைத்ததற்கு நன்றி மு.க. ஸ்டாலின் சார். உங்களுடைய தொலைநோக்கும் விளையாட்டு மீதான ஆர்வமும் முன்மாதிரியாக உள்ளது. சென்னை நகரம் போட்டியைச் சிறப்பாக நடத்தியுள்ளது. வேறு யாரும் இதைவிட சிறப்பாகச் செய்திருக்க முடியாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT