செய்திகள்

வங்கதேசம் 53 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

4th Apr 2022 05:09 PM

ADVERTISEMENT


வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் டர்பனில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 367 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேசம் 298 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

69 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்கா 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 274 ரன்கள் வெற்றி இலக்கு என்பதால், தென் ஆப்பிரிக்க மண்ணில் வங்கதேசம் முதல் வெற்றியைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 3 விக்கெட்டுகளை இழந்தது.

தொடர்ந்து, இன்று (திங்கள்கிழமை) 5-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. கடைசி நாள் ஆட்டத்தை முடிக்க தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களுக்கு வெறும் 13 ஓவர்கள் மட்டுமே தேவைப்பட்டன.

ADVERTISEMENT

இதையும் படிக்கஆர்சிபி அணி புதிதாகத் தேர்வு செய்த வீரர்

வங்கதேச வீரர்கள் அடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால், கேசவ் மகாராஜ் மற்றும் சைமன் ஹார்மர் ஆகியோரைக் கொண்டே ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது தென் ஆப்பிரிக்கா.

இரண்டாவது இன்னிங்ஸில் மொத்தம் 19 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்கதேசம் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் மகாராஜ் 7 விக்கெட்டுகளையும், ஹார்மர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்மூலம், முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இருஅணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

Tags : south africa
ADVERTISEMENT
ADVERTISEMENT