செய்திகள்

11 ஆண்டுகளுக்கு முன்பு 2011 உலகக் கோப்பையை வென்ற இந்தியா

DIN

2011 உலகக் கோப்பை இறுதிச்சுற்று, தோனியின் சிக்ஸ்.

இந்த இரண்டையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. 2011 உலகக் கோப்பை என்றால் தோனி அடித்த அந்த சிக்ஸர் தான். 

ஏப்ரல் 2, 2011. இந்த நாளில்தான் இந்திய அணி 2-வது முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது.

2011 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இலங்கை அணியை வீழ்த்தி தோனி தலைமையிலான இந்தியா உலக சாம்பியன் ஆனது.

இறுதிச்சுற்றில் கம்பீர், 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்த தோனி தான் அந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

275 ரன்கள் என்கிற இலக்கை இந்திய அணி அடைய முயன்றபோது ஆரம்பத்தில் சிறிது தடுமாறியது. சச்சின், சேவாக், கோலி ஆகியோர் ஆட்டமிழந்த பிறகு யுவ்ராஜ் சிங் தான் வழக்கம் போல களமிறங்குவார் என ரசிகர்கள் எண்ணினார்கள். ஆனால் இன்னமும் 161 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்கிற நிலையில் 5-ம் நிலை வீரராகக் களமிறங்கினார் தோனி. கம்பீருடன் அற்புதமாகக் கூட்டணி அமைத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். தோனி எடுத்த 91 ரன்களை விடவும் கடைசியில் அவர் சிக்ஸர் அடித்து உலகக் கோப்பையை முடித்தது வரலாற்றுத் தருணமாகிவிட்டது.

முதலில் விளையாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. ஜெயவர்தனே ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்து அசத்தினார். ஜாகீர் கானும் யுவ்ராஜ் சிங்கும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 

2011 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விராட் கோலி மிகச்சிறப்பாக விளையாடி கம்பீருடன் அருமையான கூட்டணி அமைத்து ஆரம்பத்தில் ஏற்பட்ட சரிவைத் தடுத்து நிறுத்தினார். 49 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார் கோலி. 

உலகக் கோப்பை வெற்றி குறித்து விராட் கோலி கூறியதாவது:

உலகக் கோப்பையை வென்ற பிறகு நன்றியுணர்ச்சியினால் சச்சினை என் தோளில் தூக்கிக் கொண்டு மைதானத்தை வலம் வந்தேன். எல்லோருடைய உணர்வுகளும் சச்சினைச் சுற்றி தான் இருந்தது. ஏனெனில் இதுதான் உலகக் கோப்பையை அவர் வெல்வதற்கான கடைசி வாய்ப்பு. பல ஆண்டுகளாக இந்தியாவுக்காக அவர் நிகழ்த்திய வெற்றிகளும் ஆட்டங்களும் எங்களுக்கு ஊக்கமாக இருந்தன. அதனால் 2011 உலகக் கோப்பை வெற்றி என்பது சச்சினுக்கு நாங்கள் அளித்த பரிசாகும். இதற்கு முன்பு அவர் தொடர்ந்து நமக்கு வழங்கிக் கொண்டிருந்தார். இந்தத் தருணம் ஒரு பரிபூரண உணர்வைத் தந்து என்றார்.

2011 உலகக் கோப்பைப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 9 ஆட்டங்களில் 482 ரன்கள் குவித்தார். 2 சதங்களும் 2 அரை சதங்களும் எடுத்தார். அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-ம் இடம் பிடித்தார். (முதல் இடம் 500 ரன்கள் எடுத்த தில்ஷனுக்கு). 

2011 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடிய கெளதம் கம்பீர் 9 ஆட்டங்களில் 393 ரன்கள் எடுத்தார். 4 அரை சதங்கள் எடுத்தார். 

தொடர் நாயகன் விருது பெற்ற யுவ்ராஜ் சிங் 9 ஆட்டங்களில் 362 ரன்களும் 15 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார். ஒரு சதமும் 4 அரை சதங்களும் எடுத்தார். 

ஜாகீர் கான் 9 ஆட்டங்களில் 21 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஷாகித் அப்ரிடியுடன் இணைந்து முதலிடத்தைப் பிடித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT