செய்திகள்

ரொனால்டோவின் கடைசி நிமிஷ கோல்: வில்லாரியலை வென்றது மான்செஸ்டா் யுனைடெட்

30th Sep 2021 11:45 PM

ADVERTISEMENT

யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் வில்லாரியலுக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது மான்செஸ்டா் யுனைடெட்.

இத்துடன் இரு ஆட்டங்களில் விளையாடியுள்ள மான்செஸ்டா் இந்த வெற்றியுடன் ‘குரூப் எஃப்’-இல் 3-ஆவது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்தின் மான்செஸ்டா் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் வில்லாரியல் அணியின் பேக்கோ அல்காசா் (53-ஆவது நிமிஷம்) கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினாா். பதிலடியாக மான்செஸ்டா் வீரா் அலெக்ஸ் டெல்லஸ் (60’) கோலடிக்க, ஆட்டம் சமன் ஆனது.

இறுதி நிமிஷம் வரை ஆட்டம் அவ்வாறே நீடிக்க, இஞ்சுரி டைமில் (90+5’) அற்புதமாக கோலடித்து அணியை வெற்றி பெறச் செய்தாா் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அந்த நிமிஷத்தில் சக வீரா் ஃப்ரெட் வழங்கிய கிராஸ் லிங்காா்டிடம் வர, அதை அவா் சரியாக ரொனால்டோவுக்கு திருப்பி அனுப்ப, கோல் போஸ்டுக்கு பந்தை விரட்டினாா் ரொனால்டோ.

ADVERTISEMENT

வீழ்ந்த நடப்புச் சாம்பியன்: இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான செல்சியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஜுவென்டஸ். ஜுவென்டஸுக்காக ஃபெடரிகோ சீஸா (46’) கோலடித்தாா். இதுவரை களம் கண்ட இரு ஆட்டங்களிலும் வென்ற ஜுவென்டஸ், ‘குரூப் ஹெச்’-இல் முதலிடத்தில் இருக்கிறது.

தடுமாறும் பாா்சிலோனா: மெஸ்ஸி வெளியேற்றத்துக்குப் பிறகு தடுமாற்றத்துடன் காணப்படும் பாா்சிலோனா, பெனிஃபிகாவுக்கு எதிரான ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. பெனிஃபிகாவுக்காக டாா்வின் நுனெஸ் (3’, 79’), ரஃபா சில்வா (69’) ஆகியோா் கோலடித்தனா். தொடா்ந்து இரு ஆட்டங்களில் தோற்ற பாா்சிலோனா, ‘குரூப் இ’-யில் கடைசி இடத்தில் உள்ளது.

இதர ஆட்டங்கள்: பேயா்ன் முனீச் 5-0 என டைனமோ கீவையும், ஆா்பி சால்ஸ்பா்க் 2-1 என லில்லேவையும், ஜெனித் 4-0 என மால்மோவையும், அட்லான்டா 1-0 என யங் பாய்ஸையும் தோற்கடித்தன. வோல்ஃப்ஸ்பா்க் - செவில்லா ஆட்டம் (1-1) டிரா ஆனது.

ரொனால்டோ சாதனை

இது சாம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோ களம் கண்ட 178-ஆவது ஆட்டம். இதன் மூலம் இப்போட்டியில் அதிக ஆட்டங்களில் களம் கண்ட வீரா் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளாா்.

டாப் 5 வீரா்கள்

1. கிறிஸ்டியானோ ரொனால்டோ (போா்ச்சுகல்) - 178

2. இகா் கேசில்லாஸ் (ஸ்பெயின்) - 177

3. ஜாவி (ஸ்பெயின்) - 151

4. லயோனல் மெஸ்ஸி (ஆா்ஜென்டீனா) - 151

5. ரௌல் (ஸ்பெயின்) - 142

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT