செய்திகள்

மன்கட் முறையில் நான்கு பேரை ரன் அவுட் செய்தது ஏன்?: வீராங்கனை பேட்டி

16th Sep 2021 04:44 PM

ADVERTISEMENT

 

போட்ஸ்வானாவில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான ஆப்பிரிக்கா தகுதிச்சுற்றுப் போட்டியில் உகாண்டா - கேம்ரூன் மகளிர் அணிகள் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த உகாண்டா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. இந்த இன்னிங்ஸில் உகாண்டா வீராங்கனைகள் நான்கு பேரை மன்கட் முறையில் ரன் அவுட் ஆச்சர்யப்படுத்தினார் 16 வயது கேம்ரூன் பந்துவீச்சாளர் மேவ் டெளமா.

முதல்முறை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தபோதே அது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. எனினும் பிறகு பேட்டிங் செய்த உகாண்டா வீராங்கனைகளும் கவனக்குறைவில் டெளமா பந்துவீச வரும்போது கிரீஸை விட்டு வெளியே வந்ததால் அடுத்தடுத்து மூன்று பேரை அதே முறையில் ரன் அவுட் செய்தார் டெளமா. எனினும் அவருடைய இந்த முயற்சியால் கேம்ரூன் அணிக்குப் பெரிய நன்மை கிடைக்கவில்லை. 2-வதாக பேட்டிங் செய்த கேம்ரூன் அணி 14.3 ஓவர்களில் 35 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை எதிர்கொண்டது. 

கிரிக்கெட்டில் மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தால் மிகப் பெரிய சர்ச்சை ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. விதிமுறைகளின்படி அதைச் செய்ய பந்துவீச்சாளருக்கு உரிமை உண்டு என்றாலும் கிரிக்கெட் உலகில் இதற்கான ஆதரவு குறைவாகவே உள்ளது. சர்ச்சையைத் தவிர்ப்பதற்காக மன்கட் முறையில் ரன் அவுட் செய்ய அணிகள் தயங்குவதுண்டு. 2019 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் பேட்ஸ்மேன் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். அது மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. 

ADVERTISEMENT

ஒரே ஆட்டத்தில் நான்கு பேரை மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்த கேம்ரூன் வீராங்கனை மேவ் டெளமா, இதுபற்றி பேட்டியளித்ததாவது:

இந்தப் போட்டியில் விளையாட வந்தபோது மன்கட் முறையில் ரன் அவுட் செய்யவேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் ஆட்டத்தின்போது எதிரணி வீராங்கனைகள் கிரீஸுக்குள் இல்லாததைக் கண்டேன். சரி, இதை வைத்து அவர்களை ஏன் ஆட்டமிழக்கச் செய்யக்கூடாது என நினைத்தேன். இது ஒரு திட்டமாக இருக்கவில்லை. ஆனால் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய ஒரு வாய்ப்பாகக் கருதினேன். இது போன்ற எதிரணி வீராங்கனைகள் இருக்கும்போது, அவர்களை ஆட்டமிழக்கச் செய்வது கடினமாக இருக்கும்போது மன்கட் முறையில் அவுட் செய்வதை நல்ல உத்தியாகக் கடைப்பிடிக்கலாம். மறுமுனையில் ஆட்டமிழக்க வாய்ப்பு கிடைக்கும்போது அந்த அழகான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முதல் ரன் அவுட்டுக்குப் பிறகு ஓர் அணியாக நாங்கள் இதைப் பற்றி விவாதித்தோம். மேலும் வாய்ப்புகள் கிடைத்தால் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தோம். என்னுடைய செயலுக்கு அணியினர் முழு ஆதரவு அளித்தார்கள் என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT