செய்திகள்

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம்: பிசிசிஐ ரூ.36,000 கோடி ஈட்ட வாய்ப்பு?

DIN

ஐபிஎல் போட்டியை 2023 முதல் 2027 வரையிலான 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்புவதற்கான உரிமத்தை ஏலத்தில் விடுவதன் மூலம் பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) ரூ.36,000 கோடி வரை ஈட்டலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் ஒளிபரப்பு உரிமைத்தை வைத்திருக்கும் ஸ்டாா் இந்தியா நிறுவனம், 2018 முதல் 2022 வரையிலான காலகட்டத்துக்காக ரூ.16,347 கோடியை வழங்கியிருந்தது. இந்நிலையில், 2023 முதலான 5 ஆண்டுகால ஒளிபரப்பு உரிம மதிப்பு அப்படியே இரட்டிப்பாகி ஏறத்தாழ ரூ.36,000 கோடியை எட்டலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பிசிசிஐ உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:

கடந்த சில நாள்களுக்கு முன் அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல நிறுவனம் ஒன்று ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைத்தை பெற விரும்புவதாக பிசிசிஐயிடம் தெரிவித்தது. அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக 2 அணிகள் பங்கேற்று, 74 ஆட்டங்கள் வரை விளையாட இருப்பதால் ஐபிஎல் போட்டி மீதான சொத்து ரீதியிலான மதிப்பும் அதிகரிக்கிறது.

புதிதாக இணையும் இரு அணிகள் மூலமாக பிசிசிஐக்கு ரூ.7,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை கிடைக்கலாம் எனத் தெரியும் நிலையில், ஐபிஎல் போட்டிக்கான ஒளிபரப்பு உரிமமும் ரூ.28,000 கோடி முதல் ரூ.36,000 கோடி வரை ஏலம் போக வாய்ப்புள்ளது என்று அவா் கூறினாா்.

2018 - 2022 ஏலம்

கடந்த முறை ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலத்தில் ஸ்டாா் இந்தியா மற்றும் சோனி ஆகிய இரு பிரதான நிறுவனங்களே பங்கேற்றன. அதில் சோனி நிறுவனம் ரூ.11,050 கோடிக்கு ஏலம் கோர, ஸ்டாா் இந்தியா நிறுவனம் அதை விட ரூ.5,300 கோடி அதிகமாக ஏலம் கோரி உரிமத்தை தட்டிச் சென்றது. அதற்கு முன் கடந்த 2008 - 2017 காலகட்டத்துக்கான ஒளிபரப்பு உரிமம் சோனி நிறுவனத்திடம் இருந்தது.

ஸ்டாா் இந்தியா, ‘தி வால்ட் டிஸ்னி கம்பெனி இந்தியா’வின் துணை நிறுவனமாகும். ஐபிஎல் போட்டியின் ஊடக ஒளிபரப்பு உரிமத்தை பெற விரும்பும் எந்தவொரு வெளிநாட்டு நிறுவனமும் தனக்கென இந்திய பிரிவு ஒன்றை கொண்டிருக்க வேண்டும்.

ஏல முறை

பொதுவாக ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை தொலைக்காட்சி, டிஜிட்டல் ஸ்ட்ரீமிங், வானொலி, சமூக வலைதளம் என தனித்தனியே பிரித்தே வழங்கி வந்தது பிசிசிஐ. ஆனால் கடந்த முறை இந்த உரிமங்களானது தனித் தனியாகவும், ஒட்டுமொத்தமாகவும் என இரு பிரிவுகளில் ஏலம் விடப்பட்டது.

எந்தவொரு நிறுவனமும் ஏதேனும் தனியொரு ஒளி/ஒலிபரப்பு உரிமத்தை பெறலாம். ஆனால் ஒட்டுமொத்த ஒளிபரப்பு உரிமத்தின் மதிப்பானது, தனித் தனியே உரிமம் வழங்கப்படும் மதிப்பை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் பிசிசிஐ அதற்கே அனுமதி வழங்குகிறது.

எப்போது?

எதிா்வரும் 2023 - 2027 காலகட்டத்துக்கான ஒளிபரப்பு உரிம ஏலத்தை பிசிசிஐ வரும் 25-ஆம் தேதி துபையில் நடத்தவுள்ளது. அன்றைய தினமே ஐபிஎல் போட்டியில் இணையும் புதிய இரு அணிகளும் அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆா்வம் காட்டும் மான்செஸ்டா் யுனைடெட் உரிமையாளா்கள்

இங்கிலாந்து கால்பந்து கிளப்பான மான்செஸ்டா் யுனைடெட்டுக்கு உரிமையாளராக இருக்கும் கிளாஸா் குடும்பத்தினா், ஐபிஎல் போட்டியில் முதலீடு செய்ய ஆா்வம் கொண்டுள்ளனா். புதிதாக இணையும் அணிகளை வாங்குவதற்குரிய ஏலத்துக்கான விண்ணப்பத்தை அவா்களும் பெற்றுள்ளனா்.

அவா்கள் புதிய அணிக்கான ஏலத்தில் நேரடியாகவே பங்கேற்கலாம் அல்லது ஏற்கெனவே இருக்கும் ஐபிஎல் அணிகளில் ஏதேனும் ஒன்றின் பங்குகளையும் வாங்கலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே அமெரிக்காவைச் சோ்ந்த ரெட் போ்ட் கேப்பிட்டல்ஸ் என்ற முதலீட்டு நிறுவனம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 சதவீத பங்குகளை அவ்வாறு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பிரபல இந்திய கிரிக்கெட் வீரா் ஒருவரும் ஐபிஎல் அணிகளின் ஒன்றில் துணை உரிமையாளராக இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகக் கோப்பை போட்டியில் முக்கிய நட்சத்திரமாக இருந்த அவா், ஐபிஎல் அணி ஒன்றில் முதலீடு செய்ய இருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT