செய்திகள்

ராகுல் டிராவிட் அறிவுரை: டி20 போட்டியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்!

21st Oct 2021 02:05 PM

ADVERTISEMENT

 

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலிருந்து தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார்.

இங்கிலாந்தில் இருந்தபோது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகினார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் பங்கேற்காமல் நாடு திரும்பினார். 

இதன்பிறகு சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான தமிழக அணியில் வாஷிங்டன் சுந்தரின் பெயர் இடம்பெற்றிருந்தது. காயத்திலிருந்து அவர் குணமடைந்துவிட்டதாகக் கூறப்பட்டது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஐபிஎல் 2021 போட்டியின் 2-ம் பகுதியில் விளையாடாத நடராஜனும் தமிழக அணியில் இடம்பெற்றிருந்தார். 

ADVERTISEMENT

இந்நிலையில் காயத்திலிருந்து முழுமையாகக் குணமாகாததால் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். பெங்களூரில் உள்ள ராகுல் டிராவிட் தலைமையிலான நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் வாஷிங்டன் சுந்தரின் உடற்தகுதி சோதனை செய்யப்பட்டது. அதில் மேலும் நான்கு வாரங்கள் ஓய்வெடுத்தால் மட்டுமே காயத்திலிருந்து குணமடைய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் எஸ். ராமசாமி ஒரு பேட்டியில் கூறியதாவது: வாஷிங்டன் சுந்தர் பற்றி ராகுல் டிராவிடம் கேட்டேன். கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடும் அளவுக்கு இன்னும் முழு உடற்தகுதியை வாஷிங்டன் சுந்தர் அடையவில்லை என்றார். உடனடியாக விளையாடும்படி அவசரம் காட்டவேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். அவருடைய கருத்தின் அடிப்படையில் முடிவு எடுத்துள்ளோம் என்று கூறினார்.

வாஷிங்டன் சுந்தரால் பேட்டிங் செய்ய முடியும் என்றாலும் பந்துவீசுவதில் இன்னும் சில சிரமங்கள் உள்ளதால் கூடுதலாக ஓய்வெடுக்க வேண்டும் என்று நேஷனல் கிரிக்கெட் அகாதெமி அறிவுறுத்தியுள்ளது. 

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி நவம்பர் 4 அன்று தொடங்கி நவம்பர் 22-ல் நிறைவுபெறுகிறது. தமிழக அணி எலைட் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. லீக் ஆட்டங்கள் அனைத்தையும் லக்னெளவில் விளையாடுகிறது. 
 

Tags : Washington Sundar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT