செய்திகள்

எது நடக்க வேண்டுமோ அது நடக்கும்: சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெயிக்வாட்

DIN

இந்திய அணிக்குத் தேர்வாவது குறித்து சிஎஸ்கே தொடக்க வீரர் ருதுராஜ் கெயிக்வாட் பேட்டியளித்துள்ளார்.

ஐபிஎல் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. 

ஐபிஎல் 2021 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 24 வயது ருதுராஜ் முதலிடம் பிடித்து அசத்தினார். ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் (24) ஆரஞ்ச் தொப்பியைப் பெற்றவர் என்கிற பெருமையை அடைந்தார். 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் 16 ஆட்டங்களில் 635 ரன்கள் எடுத்தார் ருதுராஜ். 4 அரை சதங்கள், 1 சதம். ஸ்டிரைக் ரேட் - 136.26. மற்றும் 23 சிக்ஸர்கள். ஒரு பருவத்தில் 600 ரன்கள் எடுத்த 3-வது சிஎஸ்கே வீரர். இதற்கு முன்பு ஹஸ்ஸி, ராயுடு இந்த இலக்கை எட்டியுள்ளார்கள். 

ஐபிஎல் போட்டியில் விளையாடிய 22 ஆட்டங்களிலேயே 7 ஆட்ட நாயகன் விருதுகளை ருதுராஜ் வென்றுள்ளார். அதாவது கிட்டத்தட்ட 3 ஆட்டங்களுக்கு ஒருமுறை அந்தப் பட்டத்தைத் தன்வசமாக்கிவிடுகிறார். இதுவும் ஒரு சாதனைதான். சிஎஸ்கேவுக்குப் பெரிய பலமாக இருந்து கோப்பையை வென்று தந்த ருதுராஜை 2019 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு மட்டுமே தேர்வு செய்தது சிஎஸ்கே அணி. 

இந்திய அணிக்காக இலங்கையில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் ருதுராஜ். இந்திய டி20 அணியில் ருதுராஜுக்கு நிரந்தரமாக இடமளிக்க வேண்டும் என ரசிகர்களும் கிரிக்கெட் நிபுணர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ருதுராஜ் கூறியதாவது:

பிளேஆஃப் ஆட்டத்தில் தில்லி அணிக்கு எதிரான ஆட்டம் எனக்குத் திருப்தியளித்தது. தில்லி அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். ஆடுகளமும் மெதுவாக இருந்தது. எனவே 172 ரன்கள் என்கிற இலக்கை விரட்டியது மகிழ்ச்சியளித்தது. 17 ஓவர்கள் வரை நான் விளையாடியதுதான் சென்னை அணியின் வெற்றிக்கு உதவியது என தோனி என்னைப் பாராட்டினார். 

சென்னை என்னைத் தக்கவைக்குமா என்றால்... அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. அதைப் பற்றி நான் நினைக்கவில்லை. 

இந்திய அணிக்குத் தேர்வாவது என்னுடைய கையில் இல்லை. என் பக்கத்தில் இருந்து, தேவையான அனைத்தையும் நான் சரியாகச் செய்யவேண்டும். அதாவது அதிக ரன்கள் எடுப்பது, எந்தப் போட்டியில் விளையாடினாலும் தொடர்ந்து ரன்கள் குவிப்பது என. எது நடக்கவேண்டுமோ அது நடக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT