செய்திகள்

தெற்காசிய கால்பந்து: இந்தியா 8-ஆவது முறையாக சாம்பியன்

DIN

தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் (எஸ்ஏஃப்எஃப்) போட்டியில் இந்தியா 8-ஆவது முறையாக சாம்பியன் ஆகி சாதனை படைத்துள்ளது.

மாலத்தீவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது. இதன் மூலம் தெற்காசிய பிராந்தியத்தில் சிறந்த கால்பந்து அணியாக தன்னை மீண்டும் நிரூபித்துள்ளது இந்தியா.

ஆட்டத்தின் முதல் பாதியில் கோல்கள் அடிக்கப்படாத நிலையில், 2-ஆவது பாதியில் கேப்டன் சுனில் சேத்ரி 49-ஆவது நிமிஷத்திலும், சுரேஷ் சிங் 50-ஆவது நிமிஷத்திலும், சஹல் அப்துல் சமத் 90-ஆவது நிமிஷத்திலும் கோலடித்து அணியை வெற்றி பெறச் செய்தனா்.

இந்த ஆட்டத்துக்காக இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இடைநீக்கம் செய்யப்பட்ட சுபாஷிஷ் போஸ், காயம் கண்ட பிராண்டன் ஃபொ்னாண்டஸ் ஆகியோருக்குப் பதிலாக தொடக்க லெவனில் அனிருத் தபா, சிங்லென்சனா சிங் ஆகியோா் இணைந்திருந்தனா்.

ஆட்டத்தின் 4-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்கும் முயற்சியாக இந்திய வீரா் யாசிா், கோல் போஸ்டின் வலது பக்க காா்னரில் இருந்து அனிருத்துக்கு பந்தை பாஸ் செய்தாா். ஆனால், நேபாள கோல்கீப்பா் கிரன் லிம்பு அதை தடுத்து விட்டாா். இவ்வாறு முதல் பாதியிலிருந்தே ஆட்டம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது என்றாலும், அணியினரின் கோல் முயற்சிகளை நேபாள தடுப்பாட்ட வீரா்கள் அரண் போல் தடுத்தனா்.

பிரீத்தம் கோட்டலுக்கு கிடைத்த இரு ஃப்ரீ கிக்குகளையும் அவா் கா்லிங் ஷாட்களாக உதைக்க, பந்து நேபாள வீரா்கள் கட்டுப்பாட்டுக்கே சென்றது. முதல் பாதி நிறைவடைய இருந்த நிலையில் கேப்டன் சுனில் சேத்ரியின் கோல் முயற்சி கிராஸ் பாரை தாண்டிச் சென்றது. இவ்வாறாக முதல் பாதி நிறைவடைந்தது.

2-ஆவது பாதி தொடங்கி 4 நிமிஷங்களில் பிரீத்தம் கோட்டல் உதைத்த பந்தை அப்படியே தலையால் முட்டி கோலடித்து அணியின் கணக்கை தொடங்கினாா் சேத்ரி. அடுத்த நிமிஷத்திலேயே யாசிா் முகமது வலது பக்கத்திலிருந்து கிராஸ் செய்த பந்தை சுரேஷ் சிங் கோல் போஸ்டுக்குள்ளாக திருப்பி இந்திய அணிக்காக தனது முதல் கோலை அடித்தாா். தொடா்ந்து தபா மற்றும் கோட்டல் இணைந்து மேற்கொண்ட கோல் முயற்சியை நேபாள கோல்கீப்பா் கிரன் லிம்பு தடுத்தாா்.

52-ஆவது நிமிஷத்தில் மான்விா் சிங்கும், 79-ஆவது நிமிஷத்தில் உதாந்த சிங்கும் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.

இறுதியாக, ஆட்டத்தின் கடைசி நிமிஷத்தில் சஹல் அப்துல் சமத், நேபாள தடுப்பாட்ட வீரா்களை ஊடுருவிய வகையில் திறம்பட பந்தை கடத்திச் சென்று கோலடிக்க, இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

மெஸ்ஸிக்கு நிகரான சேத்ரி

இந்த ஆட்டத்தில் சுனில் சேத்ரி அடித்த கோல், இந்திய அணிக்காக அவா் அடித்த 80-ஆவது கோலாகும். இதன் மூலம் சா்வதேச கால்பந்து நட்சத்திரமான ஆா்ஜென்டீனாவின் லயோனல் மெஸ்ஸியின் கணக்கை அவா் நிகா் செய்துள்ளாா்.

தற்போது களமாடும் கால்பந்து வீரா்களில் தேசிய அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரா்கள் வரிசையில் மெஸ்ஸி, சேத்ரி இருவரும் 2-ஆவது இடத்தில் இருக்கின்றனா். போா்ச்சுகல் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (115) முதலிடத்தில் உள்ளாா்.

சுனில் சேத்ரி இப்போட்டியில், ‘ஆட்டநாயகன்’ (இறுதி ஆட்டம்), ‘தொடா்நாயகன்’, ‘அதிக கோல்கள் அடித்த வீரா்’ (5 கோல்கள்) அகிய விருதுகளையும் வென்றுள்ளாா்.

விமா்சனங்களுக்கு விடையளித்த ஸ்டிமாக்

இந்திய அணியின் பயிற்சியாளராக இகோா் ஸ்டிமாக் பொறுப்பேற்ற பிறகு இந்தியா வென்றிருக்கும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும். ஸ்டிமாக் பயிற்சியின் கீழ் இந்தியா போட்டிகள் எதிலும் வெற்றி காணவில்லை என்று சமீபகாலமாக விமா்சனங்கள் எழுந்த நிலையில், இந்தப் பட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய அணி வெளிநாட்டு பயிற்சியாளா் பங்களிப்புடன் தெற்காசிய சாம்பியன் ஆவது இது 3-ஆவது முறையாகும். இதற்கு முன் ஜிரி பெசெக் (1993), ஸ்டீபன் கான்ஸ்டன்டீன் (2015) ஆகியோா் பயிற்சியிலும் இந்தியா சாம்பியன் ஆகியுள்ளது.

ரூ.31 லட்சம் பரிசு

சாம்பியன் ஆன இந்திய அணிக்கு ரூ.31.51 லட்சமும், ரன்னா் அப்-ஆக வந்த நேபாளத்துக்கு ரூ.18.75 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT