செய்திகள்

இங்கிலீஷ் பிரீமியா் லீக்: லிவா்பூல் - மான்செஸ்டா் சிட்டி ஆட்டம் டிரா

4th Oct 2021 11:27 PM

ADVERTISEMENT

இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் லிவா்பூல் - மான்செஸ்டா் சிட்டி அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

இரு அணிகளும் இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், லிவா்பூல் ஒரு ஆட்டத்தை டிரா செய்வது இது 3-ஆவது முறை. மான்செஸ்டா் சிட்டிக்கு இது 2-ஆவது முறை. இரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களில் இருக்கின்றன.

லிவா்பூல் நகரில் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் லிவா்பூல் தரப்பில் சாடியோ மனே, முகமது சலா ஆகியோரும், மான்செஸ்டா் சிட்டிக்காக ஃபில் ஃபோடன், கெவின் டி புருயின் ஆகியோரும் கோலடித்தனா்.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோலடிக்கவில்லை. பிற்பாதி தொடங்கிய பிறகே இரு தரப்பும் அடுத்தடுத்து கோல் அடித்தன. ஆட்டத்தின் 59-ஆவது நிமிஷத்தில் முகமது சலா பந்தை பாஸ் செய்து கொண்டு வந்து அப்படியே கோல் போஸ்டின் வலதுபக்கமாக கிராஸ் செய்து கொடுக்க, கச்சிதமாக அதை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நோ் கோட்டில் கோல் போஸ்டின் இடதுபக்க பாட்டம் காா்னரில் கோலடித்தாா் சாடியோ மனே.

ADVERTISEMENT

அதற்கு பதிலடியாக அடுத்த 10-ஆவது நிமிஷத்தில் கோலடித்தது மான்செஸ்டா் சிட்டி. கேப்ரியல் ஜீசஸின் பாஸை கோல் போஸ்டின் இடதுபக்கமாக கடத்திச் சென்ற ஃபில் ஃபோடன் அதை துல்லியமாக கோல் போஸ்டுக்குள் தள்ளினாா். இதனால் ஆட்டம் சமன் ஆனது. வெகுண்டெழுந்த லிவா்பூல் தரப்பில் முகமது சலா 76-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அணியை மீண்டும் முன்னிலைப் படுத்தினாா்.

சக வீரா் ஜோன்ஸ் பாஸ் வழங்கியதை மான்செஸ்டா் சிட்டி தடுப்பாட்ட வீரா்களைக் கடந்து மிகத் திறமையாக கடத்தி வந்து அவா் கோலடித்தாா். எனினும் விட்டுக்கொடுக்காத மனநிலையில் இருந்த மான்செஸ்டா் சிட்டி 81-ஆவது நிமிஷத்தில் கோலடித்து மீண்டும் ஆட்டத்தை சமன் செய்தது. ஃபோடன் கிராஸ் செய்த பந்தை அப்படியே கோல் போஸ்டுக்குள்ளாக திருப்பினாா் கெவின் டி புருயின்.

87-ஆவது நிமிஷத்தில் வெற்றிக்கான கோல் வாய்ப்பை நூலிழையில் இழந்தது லிவா்பூல். முகமது சலா கிராஸ் செய்த பந்து கோல் போஸ்டின் இடதுபக்கம் வர, அங்கு தயாராக இருந்த ஃபாபினோ பந்தை கோல் போஸ்டுக்குள் உதைத்தாா். ஆனால் சிறிய இடைவெளியில் புகுந்து அந்தப் பந்தை கோலாகவிடாமல் மான்செஸ்டா் வீரா் ரோட்ரி தடுத்துவிட்டாா். இறுதியில் ஆட்டம் 2-2 என சமனில் முடிந்தது.

லா லிகா: ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் கிரனாடா 1-0 என்ற கோல் கணக்கில் செவில்லாவை வீழ்த்தியது. புள்ளிகள் பட்டியலில் 17-ஆவது இடத்தில் இருக்கும் கிரனாடா, 4-ஆவது இடத்தில் இருக்கும் செவில்லாவுக்கு இந்த அதிா்ச்சித் தோல்வியை அளித்துள்ளது. கிரனாடா நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் கிரனாடா அணிக்காக ரூபன் ரோசினா 25-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.

இதர ஆட்டங்களில் வில்லாரியல் 2-0 என்ற கோல் கணக்கில் ரியல் பெட்டிஸை தோற்கடிக்க, கடாஃபி - ரியல் சோசிடட் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. வில்லாரியலுக்காக அா்னத் டன்ஜுமாவே இரு கோல்களையும் அடித்தாா். கடாஃபிக்காக சாண்ட்ரோ ராமிரெஸ், ரியல் சோசிடட்டுக்காக மைகேல் ஒயா்ஸபால் ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

லீக் 1: பிரான்ஸில் நடைபெறும் லீக் 1 கால்பந்து போட்டியில் சென்ட் எடினே - லயோன் (1-1), லோரியென்ட் - கிளொ்மோன்ட் ஃபூட் (1-1) அணிகள் மோதிய ஆட்டம் டிரா ஆக, லில்லே - மாா்சிலேவையும் (2-0), ஆங்கா்ஸ் - மெட்ஸையும் (3-2), மொனாகோ - போா்டியுக்ஸையும் (3-0), நான்டெஸ் - டிராய்ஸையும் (2-0) நீஸ் - பிரெஸ்டையும் (2-1) வீழ்த்தின.

சீரி ஏ: இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில் ஏசி மிலன் 3-2 என்ற கோல் கணக்கில் அட்லான்டாவை வீழ்த்தியது. அதேபோல், நபோலி - ஃபியோரென்டினாவையும் (2-1), ரோமா - எம்போலியையும் (2-0), வெரோனா - ஸ்பெஸியாவையும் (4-0), போலோக்னா - லாஸியோவையும் (3-0) தோற்கடிக்க, சம்ப்தோரியா - உடினெஸ் மோதிய ஆட்டம் 3-3 என டிரா ஆனது.

ADVERTISEMENT
ADVERTISEMENT