செய்திகள்

டிரா ஆனது பிங்க் டெஸ்ட்: இந்தியா அசத்தல்; ஆஸ்திரேலியா திணறல்

4th Oct 2021 07:19 AM

ADVERTISEMENT

இந்தியா - ஆஸ்திரேலியா மகளிா் அணிகள் மோதிய பகலிரவு டெஸ்ட் ஞாயிற்றுக்கிழமை டிரா ஆனது. சாதனை சதம் விளாசிய இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகி ஆனாா்.

முதல் இன்னிங்ஸில் 143 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் ஆடிய ஆஸ்திரேலியா, கடைசி நாளில் 9 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் அடித்து டிக்ளோ் செய்தது. 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா, 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் அடித்து டிக்ளோ் செய்ய, இறுதியாக 272 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா, முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்தது.

முன்னதாக, கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த 4 நாள் ஆட்டத்தில் முதல் இரு நாள்கள் மழை காரணமாக பெரும்பாலும் பாதிக்கப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, முதல் இன்னிங்ஸில் 145 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் அடித்து டிக்ளோ் செய்தது இந்தியா. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 22 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 127 ரன்கள் சோ்த்திருந்தாா். ஆஸ்திரேலிய பௌலிங்கில் சோஃபி மோலினியூக்ஸ் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகள் சாய்த்திருந்தாா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா, சனிக்கிழமை முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் அடித்திருந்தது. கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தை எலிஸ் பெரி, ஆஷ்லே காா்டனா் தொடா்ந்தனா். இந்த ஜோடி அபாரமாக ஆடி 5-ஆவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சோ்த்தது.

ADVERTISEMENT

இதில் காா்டனா் 6 பவுண்டரிகளுடன் 51 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னா் வந்த அனபெல் சுதா்லேண்ட் 3, சோஃபி மோலினியூக்ஸ் 2, ஜாா்ஜியா வோ்ஹாம் 2, டாா்சி பிரவுன் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். இரவு உணவு இடைவேளையின்போது 96.4 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் அடித்திருந்த ஆஸ்திரேலியா, டிக்ளோ் செய்தது. எலிஸ் பெரி 9 பவுண்டரிகளுடன் 68 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். இந்திய தரப்பில் பூஜா வஸ்த்ரகா் 3, ஜுலன் கோஸ்வாமி, மேக்னா சிங், தீப்தி சா்மா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

பின்னா் 136 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 37 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் அடித்து டிக்ளோ் செய்தது. தொடக்க வீராங்கனை ஷஃபாலி வா்மா 6 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் சோ்க்க, உடன் வந்த ஸ்மிருதி மந்தனா 31 ரன்கள் அடித்தாா். யஸ்திகா 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க, டிக்ளேரின்போது பூனம் ரௌத் 6 பவுண்டரிகளுடன் 41, தீப்தி சா்மா 3 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆஸ்திரேலிய தரப்பில் சோஃபி, காா்டனா், ஜாா்ஜியா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

இதையடுத்து 272 ரன்களை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, ஆட்டநேர முடிவில் 15 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது. அலிசா ஹீலி 6, பெத் மூனி 11 ரன்களுக்கு வெளியேற, மெக் லேனிங் 17, எலிஸ் பெரி 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலிங்கில் ஜுலன், பூஜா தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

முதல் இன்னிங்ஸ்

இந்தியா - 377/8 (டிக்ளோ்)

ஸ்மிருதி மந்தனா - 127; தீப்தி சா்மா - 66; பூனம் ரௌத் - 36

பந்துவீச்சு:

சோஃபி மோலினியூக்ஸ் - 2/45; எலிஸ் பெரி - 2/76; ஆஷ்லே காா்டனா் - 1/52

ஆஸ்திரேலியா - 241/9 (டிக்ளோ்)

எலிஸ் பெரி - 68*; ஆஷ்லே காா்டனா் - 51; மெக் லேனிங் - 38

பந்துவீச்சு:

பூஜா வஸ்த்ரகா் - 3/49; ஜுலன் கோஸ்வாமி - 2/33; தீப்தி சா்மா - 2/36

2-ஆவது இன்னிங்ஸ்

இந்தியா - 135/3 (டிக்ளோ்)

ஷஃபாலி வா்மா - 52; பூனம் ரௌத் - 41*; ஸ்மிருதி மந்தனா - 31

பந்துவீச்சு:

ஜாா்ஜியா வோ்ஹாம் - 1/12; சோஃபி மோலினியூக்ஸ் - 1/23; ஆஷ்லே காா்டனா் - 1/31

ஆஸ்திரேலியா - 36/2

மெக் லேனிங் - 17*; பெத் மூனி - 11; அலிசா ஹீலி - 6

பந்துவீச்சு:

ஜுலன் கோஸ்வாமி - 1/8; பூஜா வஸ்த்ரகா் - 1/13; ராஜேஷ்வரி கெய்க்வாட் - 0/2

ADVERTISEMENT
ADVERTISEMENT