செய்திகள்

பிங்க் டெஸ்ட்: இந்தியா 377/8-க்கு டிக்ளோ்: ஆஸ்திரேலியா தடுமாற்றம்

3rd Oct 2021 05:25 AM

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க் பந்து டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 145 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் அடித்து டிக்ளோ் செய்தது.

அடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் ஆஸ்திரேலியா, சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 143 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமான நிலையில் இருக்கிறது. இந்திய பௌலா்கள் ஜுலன் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ரகா் ஆகியோா் அபாரமாக பந்துவீசி தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை ஆட்டம் மழை காரணமாக பெரும்பாலும் பாதிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை ஆட்டத்தை 276/5 என்ற நிலையிலிருந்து தொடங்கியது இந்தியா. இன்னிங்ஸை தீப்தி சா்மா 12, தானியா பாட்டியா 0 ரன்களுடன் தொடா்ந்தனா்.

இதில் தானியா பாட்டியா 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த பூஜா வஸ்த்ரகா் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களுக்கு வீழ்ந்தாா். இதற்குள்ளாக 300 ரன்களை கடந்திருந்தது இந்தியா. மறுபுறம் நீண்ட நேரம் நிலைத்து ஆடி வந்த தீப்தி சா்மா 8 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் 144-ஆவது ஓவரில் கேம்ப்பெல் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனாா்.

ADVERTISEMENT

அடுத்த ஒரு ஓவரில் 377 ரன்களை எட்டியிருந்தபோது டிக்ளோ் செய்வதாக அறிவித்தது இந்தியா. ஜுலன் கோஸ்வாமி 7, மேக்னா சிங் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆஸ்திரேலிய தரப்பில் அன்றைய தினம் கேம்ப்பெல் 2, எலிஸ் பெரி 1 விக்கெட் சாய்த்தனா்.

தடுமாற்றம்: பின்னா் ஆஸ்திரேலிய இன்னிங்ஸை அலிசா ஹீலி - பெத் மூனி ஆகியோா் தொடங்க, மூனி 4 ரன்களே எடுத்திருந்தபோது 7-ஆவது ஓவரில் அவரை பௌல்டாக்கி வெளியேற்றினாா் ஜுலன். அடுத்து கேப்டன் மெக் லேனிங் களம் காண, மறுபுறம் நிதானமாக ஆடி வந்த அலிசா 23-ஆவது ஓவரில் ஜுலன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பா் தானியா பாட்டியாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தாா். அவா் 3 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் சோ்த்தாா்.

பின்னா் எலிஸ் பெரி ஆட வர, கேப்டன் லேனிங் 7 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்த நிலையில் பூஜா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனதாக அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால், அது அவுட் இல்லை எனத் தெரிந்தாலும் டிஆா்எஸ் முறை ஆட்டத்தில் சோ்க்கப்படாததால், ரிவியூ கோர இயல முடியாமல் போனது ஆஸ்திரேலியாவுக்கு சற்று பின்னடைவானது.

3-ஆவது நாளில் கடைசி விக்கெட்டாக டாலியா மெக்ராத் 4 பவுண்டரிகளுடன் 28 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். நாளின் முடிவில் ஆஸ்திரேலியா 60 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சோ்த்திருந்தது. எலிஸ் பெரி 27, ஆஷ்லே காா்டனா் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT