செய்திகள்

கான்பூர் டெஸ்ட்: நியூஸிக்கு 284 ரன்கள் இலக்கு

29th Nov 2021 04:40 AM

ADVERTISEMENT

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா தனது 2-ஆவது இன்னிங்ஸில் 81 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்துள்ளது. 

இந்த இன்னிங்ஸில் ஷ்ரேயஸ் ஐயர், கழுத்து வலியை பொறுத்துக் கொண்டு ஆடிய ரித்திமான் சாஹா ஆகியோரின் அரைசதம் இந்தியாவை ஸ்திரமடையச் செய்தது. நியூஸிலாந்து தரப்பில் டிம் செளதி, கைல் ஜேமிசன் இந்தியாவை கட்டுப்படுத்தினர். 

பின்னர் 284 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கியிருக்கும் நியூஸிலாந்து, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 4 ஓவர்களில் 4 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்தது. கடைசி நாளான திங்கள்கிழமை அந்த அணி 9 விக்கெட்டுகளைக் கொண்டு 280 ரன்கள் அடிக்க வேண்டும். 

முன்னதாக, சனிக்கிழமை முடிவிலேயே இந்தியா தனது 2-ஆவது இன்னிங்ஸில் முதல் விக்கெட்டை இழந்திருக்க, ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தை மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாராவுடன் தொடங்கியது. இதில் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்திருந்த புஜாரா, ஜேமிசன் வீசிய 12-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பர் பிளண்டெலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

ADVERTISEMENT

அடுத்து வந்த கேப்டன் அஜிங்க்ய ரஹானே 4 ரன்களே அடித்திருந்த நிலையில், அஜாஸ் படேலின் 15-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார். 5-ஆவது வீரராக ஷ்ரேயஸ் ஐயர் களம் புகுந்தார். அனுபவ வீரரைப் போல ஆடிய அவர், நிதானமாக ஸ்கோர் செய்யத் தொடங்கினார். 

தொடக்கம் முதல் நிலைத்த மயங்க் அகர்வால் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் சேர்த்திருந்தபோது, செளதி வீசிய 20-ஆவது ஓவரில் அடித்த பந்தை டாம் லதாம் கேட்ச் பிடித்தார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜாவோ அதே ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். 7-ஆவது வீரராக வந்த அஸ்வின், ஷ்ரேயஸூடன் கூட்டணி அமைத்தார். 

மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா, 32 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் அடித்திருந்தது. 6-ஆவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை, ஜேமிசன் 40-ஆவது ஓவரில் பிரித்தார். 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் அடித்திருந்த அஸ்வினை அவர் பெளல்டாக்கினார். தொடர்ந்து வந்த ரித்திமான் சாஹா, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

7-ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 64 ரன்கள் சேர்த்த நிலையில், ஷ்ரேயஸ் ஐயர் 8 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக அக்ஸர் படேல் களம் புகுந்தார். அவருடன் சாஹா கூட்டணி அமைக்க, இந்தியாவின் ஸ்கோர் 200-ஐக் கடந்தது. 

இறுதியாக 234 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர் செய்தபோது, சாஹா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 61, அக்ஸர் படேல் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து பெளலிங்கில் ஜேமிசன், செளதி ஆகியோர் தலா 3, அஜாஸ் படேல் 1 விக்கெட் எடுத்திருந்தனர். 
நியூஸிலாந்து - 4/1: நியூஸிலாந்தின் தொடக்க வீரர்களுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில், நாளின் கடைசி நேரத்தில் இந்தியா டிக்ளேர் செய்து அவர்களை பேட்டிங் செய்ய அழைத்தது.  

அதற்கான பலனாக வில் யங் விக்கெட்டைப் பெற்றது இந்தியா. நாளின் முடிவில் நியூஸிலாந்து 4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் அடித்திருந்தது. வில் யங் 2 ரன்களில் வெளியேறியிருக்க, டாம் லதாம் - வில்லியம் சாமர்வில் கூட்டணி ஆட்டமிழக்காமல் இருக்கிறது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT