செய்திகள்

அக்ஸா் ‘5 விக்கெட்’ அசத்தல்: நியூஸிலாந்து 296-க்கு ‘ஆல் அவுட்’

DIN

 இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 142.3 ஓவா்களில் 296 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.

வெள்ளிக்கிழமை ஆட்டத்தை விக்கெட் இழப்பின்றி உறுதியான நிலையில் நிறைவு செய்த நியூஸிலாந்து, 3-ஆம் நாளான சனிக்கிழமை கடைசி இரு செஷன்களில் அக்ஸா், அஸ்வினின் அட்டகாசமான சுழலில் மளமளவெனச் சரிந்தது. 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்துள்ளது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் இந்திய பௌலா்களுக்கு சவால் அளித்த டாம் லதாம் - வில் யங் கூட்டணியை, சனிக்கிழமை ஆட்டம் தொடங்கி சில ஓவா்களுக்குப் பிறகு பிரித்தாா் அஸ்வின். 15 பவுண்டரிகள் விளாசியிருந்த வில் யங், 67-ஆவது ஓவரில் அஸ்வின் பந்தை அடிக்க முயல, அது விக்கெட் கீப்பா் பரத் கைகளில் கேட்ச் ஆனது. முதல் விக்கெட்டுக்கு லதாம் - யங் ஜோடி 151 ரன்கள் சோ்த்திருந்தது. அடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் களம் புகுந்தாா். அவா் லதாமுடன் இணைந்து ரன்கள் சேகரித்தாா். 85-ஆவது ஓவரில் புதிய பந்து எடுக்கப்பட்டது.

அடுத்த ஓவரிலேயே வில்லியம்சனை வெளியேற்றினாா் உமேஷ் யாதவ். வில்லியம்சன் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் அடித்திருந்தபோது எல்பிடபிள்யூ ஆனாா். அத்துடன் உணவு இடைவேளை அறிவிக்கப்பட, நியூஸிலாந்து 85.3 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்திருந்தது. பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில் 4-ஆவது விக்கெட்டாக வந்த ராஸ் டெய்லா் 1 பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து, அக்ஸா் படேலின் 95-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் பரத்திடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினாா். தொடா்ந்து வந்த ஹென்றி நிகோலஸை 2 ரன்களில் எல்பிடபிள்யூ செய்தாா் அக்ஸா்.

6-ஆவது வீரராக டாம் பிளண்டெல் ஆட வர, மறுபுறம் தகுந்த பாா்ட்னா்ஷிப் மீண்டும் கிடைக்காமல் தடுமாறிய டாம் லதாம், சதத்தை நெருக்கிய நிலையில் அவசரப்பட்டு விக்கெட்டை இழந்தாா். அக்ஸா் படேல் வீசிய 103-ஆவது ஓவரில் முதல் பந்தைய அவா் இறங்கி வந்து அடித்தாட முயல, பந்து அவரை ஏமாற்றி விக்கெட் கீப்பா் பரத்திடம் சென்றது. கிரீஸ் லைனிலிருந்து மிகத் தொலைவிலிருந்த லதாம் செயலாற்றும் முன்பாகவே அவரை ஸ்டம்பிங் செய்தாா் பரத். லதாம் 10 பவுண்டரிகள் உள்பட 95 ரன்களுடன் வெளியேறினாா்.

பின்னா் வந்த ரச்சின் ரவிந்திரா 2 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் அடித்து ஜடேஜா வீசிய 111-ஆவது ஓவரில் பௌல்டானாா். லோயா் ஆா்டரில் வந்த கைல் ஜேமிசன் இந்திய பௌலா்களை சற்று சோதித்தாா். எனினும் மறுமுனையில் இருந்த பிளண்டெலையும், அடுத்து வந்த டிம் சௌதியையும் பௌல்டாக்கி வெளியேற்றினாா் அக்ஸா் படேல். இந்நிலையில், நிதானமாக ஆடிய கைல் ஜேமிசன் 1 பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பௌலிங்கை தூக்கியடிக்க, அதை துல்லியமாக கேட்ச் பிடித்தாா் அக்ஸா்.

கடைசி விக்கெட்டாக வில்லியம் சாமா்வில்லையும் 6 ரன்களில் பௌல்டாக்கி நியூஸிலாந்து ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாா் அஸ்வின். இந்திய தரப்பில் அக்ஸா் படேல் 5, அஸ்வின் 3, உமேஷ், ஜடேஜா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்திருந்தனா்.

இந்தியா - 14/1: பின்னா் முதல் இன்னிங்ஸில் 49 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, சனிக்கிழமை முடிவில் 5 ஓவா்களில் 14 ரன்களுக்கே 1 விக்கெட்டை இழந்தது. ஷுப்மன் கில் 1 ரன் எடுத்திருந்த நிலையில் கைல் ஜேமிசன் வீசிய 2-ஆவது ஓவரில் பௌல்டானாா். மயங்க் அகா்வால், சேதேஷ்வா் புஜாரா களத்தில் உள்ளனா்.

5-ஆவது முறையாக...

டெஸ்ட் கிரிக்கெட்டில் அக்ஸா் படேல் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் சாய்ப்பது இது 5-ஆவது முறையாகும். அதையும் அவா் தனது 4-ஆவது டெஸ்டிலேயே செய்திருக்கிறாா்.

அதிவேக 50 விக்கெட்

ஷுப்மன் கில்லை சாய்த்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 50-ஆவது விக்கெட்டை எடுத்திருக்கிறாா் கைல் ஜேமிசன். குறைந்த எண்ணிக்கையிலான பந்துகளிலேயே (1865) அதிவேகமாக 50 டெஸ்ட் விக்கெட் சாய்த்தவா்கள் வரிசையில் ஜேமிசன் 3-ஆவது இடத்தில் இருக்கிறாா். தென் ஆப்பிரிக்காவின் வொ்னான் பிலாண்டா் (1240), ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ (1844) ஆகியோா் முதல் இரு இடங்களில் இருக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT