செய்திகள்

கேப்டன் கருணாரத்னே சதம்: முதல் நாளில் இலங்கை ஆதிக்கம்

21st Nov 2021 06:02 PM

ADVERTISEMENT


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் காலேவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திமுத் கருணாரத்னே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக கருணாரத்னே, பதும் நிசன்கா ஆகியோர் களமிறங்கினர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்து 100 ரன்கள் சேர்த்தது.

கருணாரத்னே 118-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். அவரைத் தொடர்ந்து நிசன்காவும் 132-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

ADVERTISEMENT

அரைசதம் அடித்த சிறிது நேரத்திலேயே நிசன்கா 56 ரன்களுக்கு ஷனான் கேப்ரியல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஓஷாடா பெர்னான்டோவும் அனுபவ ஆஞ்சலோ மேத்யூஸும் தலா 3 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இதையும் படிக்கஹெல்மட்டில் தாக்கிய பந்து: மருத்துவமனையில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் (விடியோ)

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், பாட்னர்ஷிப் அமைக்க வேண்டிய நிர்பந்தம் கருணாரத்னே மற்றும் தனஞ்ஜெயா டி சில்வாவுக்கு ஏற்பட்டது.

இந்த இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நெருக்கடியை மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் பக்கமே திருப்பியது. கருணாரத்னேவும் 212-வது பந்தில் தனது சதத்தை எட்டினார். 

இதன்பிறகு, இந்த பாட்னர்ஷிப் மெதுவாக 50 ரன்களை எட்டியது. டி சில்வாவும் துரிதமாக விளையாடி 62-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

முதல் நாள் ஆட்டம் முடியும் வரை மேற்கிந்தியத் தீவுகளால் இந்த இணையைப் பிரிக்க முடியவில்லை. 

முதல் நாள் ஆட்டநேர முடிவில் கருணாரத்னே 265 பந்துகளில் 132 ரன்கள் எடுத்தும், டி சில்வா 77 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷேனான் கேப்ரியல் 1 விக்கெட்டையும், ராஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Tags : Karunaratne
ADVERTISEMENT
ADVERTISEMENT