செய்திகள்

இந்திய வீரர்கள் அதிரடி: நியூசிலாந்துக்கு 185 ரன்கள் இலக்கு

21st Nov 2021 08:55 PM

ADVERTISEMENT


நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் தொடக்க முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ரன் ரேட் ஓவருக்கு 9-ஐ தாண்டி பயணித்தது.

லாக்கி பெர்குசன் வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில் ரோஹித் சர்மா 2 பவுண்டரி, 1 சிக்ஸரும், கிஷன் 1 பவுண்டரியும் விளாச இந்திய அணிக்கு அந்த ஓவரில் 20 ரன்கள் கிடைத்தது. 6 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் 7-வது ஓவரை வீசினார். அவர் தனது முதல் ஓவரிலேயே கிஷன் (29), சூர்யகுமார் யாதவ் (0) விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்தும் 4 ரன்களுக்கு சான்ட்னர் சுழலில் ஆட்டமிழந்தார்.

ADVERTISEMENT

இதையும் படிக்கஹெல்மட்டில் தாக்கிய பந்து: மருத்துவமனையில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் (விடியோ)

இதனால், அணியின் ரன் ரேட் ஓவருக்கு 9-க்கு குறைந்தது. பெரிய பாட்னர்ஷிப்பை அமைக்க வேண்டிய தேவை இருந்த சூழலில் ரோஹித் சர்மாவும் அரைசதம் அடித்ததோடு 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

12 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, ஷ்ரேயஸ் ஐயரும், வெங்கடேஷ் ஐயரும் சிறிய பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். அதேசமயம், இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வெங்கடேஷ் 20 ரன்களும், ஷ்ரேயஸ் 25 ரன்களும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய ஹர்ஷல் படேல் சிறிய அதிரடி காட்டி 18 ரன்கள் எடுத்தார்.

கடைசி ஓவரில் தீபக் சஹார் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது.

20-வது ஓவரில் மட்டும் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் பறக்க 19 ரன்கள் கிடைத்தன. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தீபக் சஹார் 8 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து தரப்பில் சான்ட்னர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட், ஆடம் மில்ன், லாக்கி பெர்குசன், இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Tags : Rohit Sharma
ADVERTISEMENT
ADVERTISEMENT