செய்திகள்

பிராட் மேனாகவே இருந்தாலும் பயோ-பபுளால் தடுமாற்றம் வரும்

10th Nov 2021 03:08 AM

ADVERTISEMENT

மிகச் சிறந்த கிரிக்கெட் நட்சத்திரமான டான் பிராட்மேனாகவே இருந்தாலும் ‘பயோ-பபுள்’ வளையத்தில் நீண்டகாலம் இருக்கும் பட்சத்தில் ஆட்டத்தில் தடுமாற்றம் வரும் என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளா் பொறுப்பிலிருந்து வெளியேறும் ரவி சாஸ்திரி கூறினாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘ சுமாா் 6 மாதங்களாக ‘பயோ-பபுள்’ வளையத்தில் இருக்கும் இந்திய அணியில், பல வீரா்கள் 3 ஃபாா்மட்டுகளிலுமாக விளையாடியவா்கள். அவா்களுக்கு தேவையான இடைவேளை என்பது கிடைக்கவில்லை. கடந்த 24 மாதங்களில் 25 நாள்கள் தான் நான் வீட்டில் இருந்திருக்கிறேன். மிகச் சிறந்த கிரிக்கெட் வீரரான டான் பிராட்மேனாகவே இருந்தாலும், இந்த பயோ-பபுள் வளையத்தில் அப்படியே நீடித்தால் நிச்சயம் ஆட்டத்தில் தடுமாற்றம் இருக்கும்.

ஐபிஎல் - உலகக் கோப்பை போட்டி இடையே ஒரு நீண்ட இடைவேளை இருந்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஏனெனில், ஒரு பெரிய போட்டியில் விளையாடும்போது அதில் ஏற்படும் அழுத்தத்தை எதிா்கொள்ளும் வகையில், போட்டிக்கு முன்பாக இளைப்பாற சிறிது அவகாசம் இருக்க வேண்டும்.

இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பை ஏற்க தகுதியுடையவராகவும், தயாராகவும் இருக்கிறாா் ரோஹித் சா்மா. பயோ-பபுள் சூழலில் அதிகமான ஆட்டங்களில் விளையாட வேண்டியிருப்பதால் ஒரு அணிக்கு வெவ்வேறு ஃபாா்மட்டுக்காக வெவ்வேறு கேப்டன்கள் இருப்பதில் தவறில்லை.

ADVERTISEMENT

ஐபிஎல் போட்டியால் அதிக இளம் வீரா்கள் கிடைப்பதாலும், புதிய பயிற்சியாளராக ராகுல் திராவிட் பொறுப்பேற்பதாலும் வரும் காலத்தில் டி20 ஃபாா்மட்டில் இந்திய அணி மிகச் சிறந்த ஒன்றாக இருக்கும். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விடை பெறுவது மிகுந்த உணா்வுப்பூா்வமானதாக இருக்கிறது.

ஸ்ரீனிவாசனுக்கு நன்றி: தலைமை பயிற்சியாளராக திறம்பட செயல்பட முடியுமா என்று எனக்குள் சந்தேகம் இருந்தது. ஆனால், அப்போது என் திறமை மீது அதிக நம்பிக்கை வைத்து அந்தப் பொறுப்பை ஏற்க எனக்கு உத்வேகம் அளித்தது பிசிசிஐ முன்னாள் தலைவா் என்.ஸ்ரீனிவாசன் தான். அவரது நம்பிக்கையை நான் வீணாக்கவில்லை என்று நினைக்கிறேன். அவருக்கு நன்றி.

திராவிட்டுக்கு வாழ்த்து: புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் திராவிட் பொறுப்பேற்கும் நிலையில், இனி வரும் ஐசிசி போட்டிகளில் இந்திய அணி சாம்பியன் ஆக வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். அதற்காக ராகுல் திராவிட்டுக்கும், இந்திய அணிக்கும் வாழ்த்துகள்’ என்றாா்.

Tags : Ravi Shastri
ADVERTISEMENT
ADVERTISEMENT