செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் அட்டவணையில் மாற்றம் செய்ய பிசிசிஐ கோரிக்கை

21st May 2021 10:59 AM

ADVERTISEMENT

 

ஐபிஎல் 2021 போட்டியை நடத்துவதற்காக இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரை ஒரு வாரத்துக்கு முன்பு முடிக்க முடியுமா என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் (ஈசிபி) பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக ஜூன் 2 அன்று இந்திய அணி இங்கிலாந்துக்குச் செல்கிறது. 

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறுகிறது. அதன்பிறகு இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கி, செப்டம்பர் 14 அன்று முடிவடைகிறது.

ADVERTISEMENT

கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன. இதனால் இந்த ஆண்டு மீதமுள்ள ஐபிஎல் ஆட்டங்களை முடிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது பிசிசிஐ.

இதையடுத்து ஆகஸ்ட் 4 அன்று தொடங்கும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரை ஒரு வாரத்துக்கு முன்பு தொடங்கி, ஒரு வாரத்துக்கு முன்பு முடித்துவிட வாய்ப்புள்ளதா என ஈசிபியிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது. டெஸ்ட் தொடர் ஒரு வாரத்துக்கு முன்பு அதாவது செப்டம்பர் 7 அன்று நிறைவுபெற்றால் அதன்பிறகு செப்டம்பர் மாதத்துக்குள் ஐபிஎல் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களை நடத்திவிட பிசிசிஐ திட்டமிடுகிறது. டி20 உலகக் கோப்பை அக்டோபர் மத்தியில் ஆரம்பித்து நவம்பர் 14-ல் முடிவடைவதால் அதற்கு முன்பு ஐபிஎல் போட்டியை முடிக்க பிசிசிஐ யோசித்து வருகிறது.

பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்பதில் ஈசிபிக்கு ஏராளமான சிக்கல்கள் உள்ளன. தி ஹண்ட்ரெட் போட்டி ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரில் மாற்றம் ஏற்பட்டால் தி ஹண்ட்ரெட் போட்டிக்கு மைதானங்களை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும். இங்கிலாந்து வீரர்கள் இதில் பங்கேற்பதிலும் பிரச்னைகள் வரலாம். மேலும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பெரும்பாலான டிக்கெட்டுகளும் விற்றுவிட்டன. டெஸ்ட் தொடரில் ஒரு டெஸ்டைக் குறைத்தாலும் ஈசிபிக்குச் சில சிக்கல்கள் ஏற்படும். இதனால் பிசிசிஐயின் கோரிக்கையை ஈசிபி மறுப்பதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளதாகத் தெரிகிறது. எனினும் இரு தரப்பினரும் விரைவில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags : IPL BCCI ECB
ADVERTISEMENT
ADVERTISEMENT