செய்திகள்

ஐபிஎல் 2021 போட்டியில் விளையாடுவேன்: ஆர்ச்சர் நம்பிக்கை

15th May 2021 01:31 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் 2021 போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களில் விளையாடுவேன் என இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஆர்ச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. 

கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன.

ADVERTISEMENT

ஐபிஎல் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்கள் இந்த வருடம் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இப்போட்டியில் இங்கிலாந்து வீரர்களால் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி விளையாடும் ஆட்டங்களில் (முன்னணி) இங்கிலாந்து வீரர்கள் கலந்துகொள்ள வேண்டும் என எண்ணுகிறோம். செப்டம்பர், அக்டோபரில் பாகிஸ்தான், வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்யும்போது அனைத்து இங்கிலாந்து வீரர்களும் பங்கேற்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் நிலைமை வேறு. அந்தத் தொடர் பற்றி இறுதி செய்தபோது ஐபிஎல் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து வீரர்கள் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். ஐபிஎல் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்கள் எப்படி, எங்கே, எப்போது அமையும் என யாருக்கும் தெரியாது. ஆனால் எங்களுக்கு டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் உள்பட தொடர்ச்சியான சர்வதேச ஆட்டங்கள் உள்ளன. எனவே எங்கள் வீரர்களை அதற்கேற்றபடி கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு என்று இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட்டின் இயக்குநர் ஆஷ்லி கைல்ஸ் சமீபத்தில் கூறினார்.

ஐபிஎல் 2021 போட்டியில் சிஎஸ்கேவின் மொயீன் அலி, சாம் கரண், ராஜஸ்தானின் ஜாஸ் பட்லர், சன்ரைசர்ஸின் ஜானி பேர்ஸ்டோவ் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இதனால் ஐபிஎல் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடாமல் போனால் சிஎஸ்கே உள்ளிட்ட அணிகளுக்குப் பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஐபிஎல் 2021 போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களில் விளையாட ஆர்வமாக உள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆர்ச்சர் கூறியுள்ளார். காயம் காரணமாக இந்த வருடப் போட்டியின் முதல் பாதி ஆட்டங்களில் இருந்து அவர் விலகினார். இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடுவது பற்றி ஒரு பேட்டியில் ஆர்ச்சர் கூறியதாவது:

இந்தியாவின் தற்போதைய சூழல் மோசமாக உள்ளது. ஐபிஎல்-லில் விளையாட இந்தியாவுக்கு நான் சென்றிருந்தாலும் இந்நேரம் இங்கிலாந்துக்குத் திரும்பிருப்பேன். மீண்டும் ஐபிஎல் 2021 போட்டி நடக்கும்போது அதில் விளையாடுவேன் என நம்பிக்கையுடன் உள்ளேன் என்றார்.

Tags : Archer IPL RR
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT