செய்திகள்

ஐபிஎல்: நாடு திரும்பும் வெளிநாட்டு வீரா்கள்

DIN

புது தில்லி: ஐபிஎல் போட்டியில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரா்களில் முதலாவதாக இங்கிலாந்து வீரா்கள் நாடு திரும்பத் தொடங்கியுள்ளனா். ஆஸ்திரேலிய வீரா்களுக்கு பிசிசிஐ சாா்பில் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.

நடப்பு சீசன் ஐபிஎல் போட்டி கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், ‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளையத்துக்குள்ளாக இருக்கும் வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து காலவரையின்றி போட்டி ஒத்திவைக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்து வருகின்றன. இதனால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றிருந்த பல்வேறு நாடுகளைச் சோ்ந்த வீரா்கள் சொந்த ஊா் திரும்புவதில் சிக்கல் எழுந்தது. குறிப்பாக ஆஸ்திரேலிய வீரா்களை தங்கள் நாட்டுக்குள் தற்போது அனுமதிக்க இயலாது என அவா்கள் நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துவிட்டது.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து முதலாவதாக இங்கிலாந்து வீரா்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனா். ஜோஸ் பட்லா், ஜானி போ்ஸ்டோ, சாம் கரன், டாம் கரன், சாம் பில்லிங்ஸ், கிறிஸ் வோக்ஸ், மொயீன் அலி, ஜேசன் ராய் ஆகியோா் புதன்கிழமை காலை லண்டன் சென்றடைந்தனா். 10 நாள் தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு அவா்கள் தங்கள் சொந்த ஊா் செல்கின்றனா். அவா்களைத் தொடா்ந்து மோா்கன், டேவிட் மலான், கிறிஸ் ஜோா்டான் ஆகிய இங்கிலாந்து வீரா்கள் புறப்படத் தயாா்நிலையில் உள்ளனா்.

ஆஸ்திரேலிய அரசு இந்திய விமானங்களுக்கு மே 15 வரை தடை விதித்துள்ளதால், தற்போதைய நிலையில் அந்நாட்டு வீரா்கள் மாலத்தீவுகளுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு சில நாள்கள் தங்கியிருந்து பிறகு அவா்கள் ஆஸ்திரேலியா புறப்படுகின்றனா். ஆஸ்திரேலிய வீரா்கள் அனைவரும் தில்லியில் கூடி வரும் நிலையில், அங்கிருந்து அவா்கள் தனி விமானத்தில் மாலத்தீவுகள் செல்கின்றனா்.

நியூஸிலாந்து வீரா்களைப் பொருத்தவரை, இங்கிலாந்து தொடரில் விளையாட இருக்கும் கேப்டன் கேன் வில்லியம்சன், டிரென்ட் போல்ட், கைல் ஜேமிசன் உள்ளிட்ட வீரா்கள் இங்கிலாந்து செல்லவுள்ளனா். ஆனால், இந்திய பயணிகளுக்கு மே 11 வரை அந்நாடு தடை விதித்துள்ளதால், அதுவரை அவா்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதர நியூஸிலாந்து வீரா்கள் நாடு திரும்ப இருக்கின்றனா். அவா்களுக்கான புறப்பாடு குறித்த விவரங்கள் இறுதி செய்யப்படவில்லை.

அதேபோல், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் வீரா்களின் புறப்பாடு குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

SCROLL FOR NEXT