செய்திகள்

காயத்திலிருந்து முழுமையாக மீண்டார் ஷமி: ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவுள்ளார்

29th Mar 2021 03:18 PM

ADVERTISEMENT

 

காயம் காரணமாக ஐபிஎல் போட்டிக்குத் தயாராக நிறைய நேரம் இருந்தது என வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார்.

அடிலெய்ட் டெஸ்டில் பேட்டிங் செய்தபோது ஷமியின் கையில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்திரேலியத் தொடரின் இதர ஆட்டங்களிலும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களிலும் ஷமி பங்கேற்கவில்லை. இதையடுத்து ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக ஷமி பங்கேற்கவுள்ளார்.

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஷமி பேட்டியளித்ததாவது:

ADVERTISEMENT

நீண்ட நாளாக உடற்தகுதி பிரச்னை இல்லாமல் இருந்தேன். பேட்டிங் செய்கிறபோது காயம் ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது. என்னால் இதை ஒன்றும் செய்ய முடியாது. விளையாட்டில் காயம் ஏற்படுவதும் ஒரு பகுதிதான். 

நேர்மறை விஷயங்களையே நான் பார்ப்பேன். கடந்த பருவம் எனக்கு நன்றாக அமைந்தது. அந்த ஃபார்மை ஐபிஎல் போட்டிக்கும் என்னால் கொண்டு செல்ல முடியும். காயம் காரணமாக ஐபிஎல் போட்டிக்குத் தயாராக நிறைய நேரம் இருந்தது. என்.சி.ஏ.வில் தான் பல நாள்கள் இருந்தேன். நான் வீட்டுக்குச் சென்றிருக்கலாம். ஆனால் கரோனா அச்சுறுத்தலால் என்.சி.ஏ.வில் அதிக காலம் செலவிட முடிவெடுத்தேன். அங்குள்ள வசதிகள் நன்றாக இருக்கும். அங்கு கரோனா வழிமுறைகளையும் பின்பற்ற முடியும். 

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி மோசமாக விளையாடிய பழைய அனுபவங்களை மாற்ற முடியாது. கடந்த பருவத்தில் என் திறமையை அதிகமாக வெளிப்படுத்தினேன். மற்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் முடிந்தவரை உதவி செய்தேன். இப்போது நல்ல வெளிநாட்டு வீரர்கள் உள்ளார்கள். பலமான அணியாக உள்ளதால் இந்தமுறை நன்கு விளையாட வாய்ப்புண்டு. நூலிழையில் சில ஆட்டங்களில் தோற்றோம். முந்தைய வருடத்தை விடவும் கடைசி ஓவர்களில் ஓரளவு நன்றாகப் பந்துவீசினோம். எனவே இந்தமுறை நன்றாக விளையாடுவோம் என்றார். 

2020 ஐபிஎல் போட்டியில் 14 ஆட்டங்களில் விளையாடிய ஷமி, 20 விக்கெட்டுகள் எடுத்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி ஏப்ரல் 12 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராகத் தனது முதல் ஆட்டத்தை விளையாடுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT