செய்திகள்

கடைசி ஓவரில் யார்க்கர் பந்துகளை வீசி அசத்திய நடராஜன்: குவியும் பாராட்டுகள்!

29th Mar 2021 11:40 AM

ADVERTISEMENT

 

3-வது ஒருநாள் ஆட்டத்தின் கடைசி ஓவரைச் சிறப்பாக வீசி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்த தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து ஆமதாபாத்தில் நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-2 என இந்தியா வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவில் நடைபெற்றது. முதல் ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி, 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 337 ரன்கள் இலக்கை 43.3 ஓவர்களில் அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நேற்று நடைபெற்ற பரபரப்பான 3-வது ஒருநாள் ஆட்டத்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.

இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் சாம் கரண் விளையாடினார். இங்கிலாந்து வெற்றி பெற 14 ரன்கள் தேவைப்பட்டபோது தொடர்ச்சியாக யார்க்கர் பந்துகளை வீசி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன். அந்த ஓவரில் சாம் கரண் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். 

ADVERTISEMENT

பரிசளிப்பு விழாவில் இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது: கடைசி ஓவர்களை ஹார்திக் பாண்டியாவும் நடராஜனும் சிறப்பாகப் பந்துவீசினார்கள் என்றார். 

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ஒரு பேட்டியில் கூறியதாவது:

யார்க்கர் பந்துவீச்சு என்பது அழிந்து வருகிறது. உலகம் முழுக்க நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் யார்க்கர் பந்துவீச்சைப் பந்துவீச்சாளர்கள் சுலபமாக வீசுவார்கள் என நினைப்பீர்கள். இப்போதும் அதைத் துல்லியமாக வீசுவது கடினமானது. சரியாக வீசாவிட்டால் பந்து சிக்ஸருக்குப் பறக்கும். பதற்றமான தருணத்தில் சிறப்பாகப் பந்துவீசினார் நடராஜன். சாம் கரண் அடிக்க முடியாத அளவுக்கு பந்து வீசப்பட்டது. பில்லியன் பார்வையாளர்கள் பார்க்கும் ஆட்டத்தில் நடராஜனின் இதயத் துடிப்பு எப்படியிருந்திருக்கும்! துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீசிய நடராஜனுக்குப் பாராட்டுகள் என்றார். 

கடைசி ஓவரில் சிறப்பாகப் பந்துவீசினார் நடராஜன். சிறந்த பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்துள்ளார் என நடராஜனை சாம் கரணும் பரிசளிப்பு விழாவில் பாராட்டினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT