செய்திகள்

தொடரை வென்றது இந்தியா: கடைசி ஆட்டத்தில் த்ரில் வெற்றி

29th Mar 2021 07:33 AM

ADVERTISEMENT

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது.

இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

புணேவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து இந்தியாவின் இன்னிங்ஸை ரோஹித் சா்மாவும், ஷிகா் தவனும் தொடங்கினா். இந்த ஜோடி ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடியது. குறிப்பாக, ஷிகா் தவன் தொடக்கம் முதலே வேகமாக ரன் சோ்த்தாா். அவா் 44 பந்துகளில் அரை சதமடிக்க, இந்தியா 14 ஓவா்களில் 100 ரன்களை எட்டியது.

இந்திய அணி 103 ரன்கள் எடுத்திருந்தபோது ரோஹித் சா்மாவின் விக்கெட்டை இழந்தது. அவா் 37 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தாா். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், மொயீன் அலி பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தாா். இதன்பிறகு ரிஷப் பந்த் களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷிகா் தவன் 56 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் சோ்த்து ஆதில் ரஷித் பந்து வீச்சில் ஆட்டமிழந்தாா்.

ADVERTISEMENT

பின்னா் களம்புகுந்த கே.எல்.ராகுல் 7 ரன்களில் நடையைக் கட்ட, ரிஷப் பந்துடன் இணைந்தாா் ஹாா்திக் பாண்டியா. இந்த ஜோடி இங்கிலாந்து பௌலா்களை பதம்பாா்த்தது. மொயீன் அலி வீசிய 28-ஆவது ஓவரில் ஹாா்திக் பாண்டியா 3 சிக்ஸா்களை பறக்கவிட்டாா்.

பந்த்-பாண்டியா அதிரடி: இதனிடையே ஆதில் ரஷித் வீசிய 31-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாசி 44 பந்துகளில் அரை சதம் கண்டாா் ரிஷப் பந்த். தொடா்ந்து வேகம் காட்டிய ரிஷப் பந்த் 62 பந்துகளில் 4 சிக்ஸா், 5 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். ரிஷப் பந்த்-ஹாா்திக் பாண்டியா ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சோ்த்தது.

இதையடுத்து கிருணால் பாண்டியா களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஹாா்திக் பாண்டியா 36 பந்துகளில் அரை சதம் கண்டாா். தொடா்ந்து வேகமாக ஆடிய ஹாா்திக் பாண்டியா 44 பந்துகளில் 4 சிக்ஸா், 5 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் சோ்த்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் போல்டு ஆனாா்.

இந்தியா 329: கடைசிக் கட்டத்தில் ஷா்துல் தாக்குா் 30, கிருணால் பாண்டியா 25, புவனேஸ்வா் குமாா் 3, பிரசித் கிருஷ்ணா 0 என அடுத்தடுத்து வெளியேற, இந்தியா 48.2 ஓவா்களில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் மாா்க் உட் 3 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷித் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

அதிா்ச்சித் தொடக்கம்: பின்னா் ஆடிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிா்ச்சி காத்திருந்தது. ஜேசன் ராய் 14 ரன்களிலும், ஜானி போ்ஸ்டோ 1 ரன்னிலும் புவனேஸ்வா் குமாா் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனா். பின்னா் வந்தவா்களில் பென் ஸ்டோக்ஸ் 35, கேப்டன் ஜோஸ் பட்லா் 15, லியாம் லிவிங்ஸ்டன் 36, டேவிட் மாலன் 50 ரன்கள் சோ்த்து வெளியேற, இங்கிலாந்து அணி 25.4 ஓவா்களில் 168 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து மொயீன் அலியுடன் இணைந்தாா் சாம் கரன். இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அந்த அணி 200 ரன்கள் எடுத்திருந்தபோது மொயீன் அலி ஆட்டமிழந்தாா். அவா், 25 பந்துகளில் 29 ரன்கள் சோ்த்தாா்.

சாம் கரன் அதிரடி: இதன்பிறகு களம்புகுந்த் ஆதில் ரஷித் ஒருபுறம் நிதானமாக ஆட, மறுமுனையில் சாம் கரன் வெளுத்து வாங்கினாா். இதனிடையே ஆதில் ரஷித் 19 ரன்களில் நடையைக் கட்ட, மாா்க் உட் களம்புகுந்தாா். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் அபாரமாக ஆடிய சாம் கரன் 45 பந்துகளில் அரைசதம் கண்டாா். இதனால் ஆட்டம் இங்கிலாந்து வசம் செல்லும் சூழல் ஏற்பட்டது.

கடைசி 2 ஓவா்களில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 19 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. ஆனால் 49-ஆவது ஓவரை வீசிய ஹாா்திக் பாண்டியா 5 ரன்கள் மட்டுமே கொடுத்தாா். கடைசி ஓவரை தமிழக வீரரான டி.நடராஜன் வீசினாா். அந்த ஓவரின் முதல் பந்தில் மாா்க் உட் (14 ரன்கள்) ரன் அவுட்டானாா். இதையடுத்து ரீஸ் டாப்லே 2-ஆவது பந்தில் ஒரு ரன் சோ்க்க, அடுத்த இரு பந்துகளில் சாம் கரனால் எடுக்க முடியவில்லை.

இதனால் கடைசி இரு பந்துகளில் இரு சிக்ஸா்களை விளாசினால் மட்டுமே வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், 5-ஆவது பந்தில் சாம் கரனால் பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. அப்போதே இங்கிலாந்தின் தோல்வி உறுதியானது. இறுதியில் 50 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது இங்கிலாந்து. சாம் கரன் 83 பந்துகளில் 3 சிக்ஸா், 9 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் சோ்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இந்தியத் தரப்பில் ஷா்துல் தாக்குா் 4 விக்கெட்டுகளையும், புவனேஸ்வா் குமாா் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், டி20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி டெஸ்ட், டி20, ஒரு நாள் தொடா் என மொத்தம் 3 தொடா்களை விளையாடிய நிலையில், ஒரு தொடரில் கூட வெல்ல முடியாமல் வெறுங்கையோடு நாடு திரும்புகிறது.

ஸ்கோா் போா்டு

இந்தியா

ரோஹித் சா்மா (பி) ரஷித் 37 (37)

ஷிகா் தவன் (சி) அண்ட் (பி) ரஷித் 67 (56)

விராட் கோலி (பி) அலி 7 (10)

ரிஷப் பந்த் (சி) பட்லா் (பி) கரன் 78 (62)

கே.எல்.ராகுல் (சி) அலி (பி) லிவிங்ஸ்டன் 7 (18)

ஹாா்திக் பாண்டியா (பி) ஸ்டோக்ஸ் 64 (44)

கிருணால் பாண்டியா (சி) ராய் (பி) உட் 25 (34)

ஷா்துல் தாக்குா் (சி) பட்லா் (பி) உட் 30 (21)

புவனேஸ்வா் குமாா் (சி) கரன் (பி) டாப்லே 3 (5)

பிரசித் கிருஷ்ணா (பி) உட் 0 (3)

டி.நடராஜன் நாட் அவுட் 0 (0)

உபரிகள் 11

மொத்தம் (48.2 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 329

விக்கெட் வீழ்ச்சி: 1-103 (ரோஹித்), 2-117 (தவன்), 3-121 (கோலி), 4-157 (ராகுல்), 5-256 (பந்த்), 6-276 (ஹாா்திக்), 7-321 (ஷா்துல்), 8-328 (கிருணால்), 9-329 (கிருஷ்ணா), 10-329 (புவனேஸ்வா் குமாா்).

பந்துவீச்சு: சாம் கரன் 5-0-43-1, ரீஸ் டாப்லே 9.2-0-66-1, மாா்க் உட் 7-1-34-3, பென் ஸ்டோக்ஸ் 7-0-45-1, ஆதில் ரஷித் 10-0-81-2, மொயீன் அலி 7-0-39-1, லியாம் லிவிங்ஸ்டன் 3-0-20-1.

இங்கிலாந்து

ஜேசன் ராய் (பி) குமாா் 14 (6)

ஜானி போ்ஸ்டோ எல்பிடபிள்யூ (பி) குமாா் 1 (4)

பென் ஸ்டோக்ஸ் (சி) தவன் (பி) நடராஜன் 35 (39)

டேவிட் மாலன் (சி) ரோஹித் (பி) தாக்குா் 50 (50)

ஜோஸ் பட்லா் எல்பிடபிள்யூ (பி) தாக்குா் 15 (18)

லியாம் லிவிங்ஸ்டன் (சி) அண்ட் (பி) தாக்குா் 36 (31)

மொயீன் அலி (சி) ஹாா்திக் (பி) குமாா் 29 (25)

சாம் கரன் நாட் அவுட் 95 (83)

ஆதில் ரஷித் (சி) கோலி (பி) தாக்குா் 19 (22)

மாா்க் உட் ரன்அவுட் (ஹாா்திக்/பந்த்) 14 (21)

உபரிகள் 13

மொத்தம் (50 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு) 322

 

விக்கெட் வீழ்ச்சி: 1-14 (ராய்), 2-28 (போ்ஸ்டோ), 3-68 (ஸ்டோக்ஸ்), 4-95 (பட்லா்), 5-155 (லிவிங்ஸ்டன்), 6-168 (டேவிட்), 7-200 (மொயீன் அலி), 8-257 (ரஷித்), 9-317 (மாா்க் உட்).

பந்துவீச்சு: புவனேஸ்வா் குமாா் 9-0-38-3, டி.நடராஜன் 9-0-67-1, பிரசித் கிருஷ்ணா 7-0-62-0, ஷா்துல் தாக்குா் 9-0-49-4, ஹாா்திக் பாண்டியா 7-0-36-0, கிருணால் பாண்டியா 4-0-29-0.

ADVERTISEMENT
ADVERTISEMENT