ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக ஷ்ரேயஸ் ஐயர் விலகுவதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.
புணேவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் ஃபீல்டிங் செய்தபோது அவருடைய இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக ஓய்வறைக்கு அவர் திரும்பினார்.
எனினும் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரு ஒருநாள் ஆட்டங்களில் இருந்தும் ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார். மேலும் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியின் முதல் பாதியில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிகிறது.
இந்நிலையில் ஒருநாள் தொடரிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. ஷ்ரேயஸ் ஐயர் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு அவர் வெளியேறவுள்ளார் என பிசிசிஐ செய்தித்தொடர்பாளர் இன்று கூறியுள்ளார்.
ஒருநாள் தொடரில் ஷ்ரேயஸ் ஐயருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் அல்லது ஷுப்மன் கில் ஆகிய இருவரில் ஒருவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவுள்ளது. ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார் ஷ்ரேயஸ் ஐயர். ஐபிஎல் போட்டியிலிருந்தும் அவர் விலக நேர்ந்தால் துணை கேப்டனாக உள்ள ரிஷப் பந்த், தில்லி ஐபிஎல் அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.