இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியது:
"ரோஹித் கூறியதுபோல் நானும் ரோஹித்தும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கியது தந்திரமான நகர்வு. நாங்கள் இருவரும் இணைந்து பேட்டிங் செய்தது மிகவும் பிடித்தது. நாங்கள் இணைந்து பேட்டிங் செய்ததன் தாக்கத்தையும் பார்த்தோம். எதிர்காலத்திலும் இது தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
நான் 4-வது பேட்டிங் வரிசையிலும் பேட் செய்துள்ளேன், 3-வது பேட்டிங் வரிசையிலும் பேட் செய்துள்ளேன். தற்போது தொடக்க ஆட்டக்காரராக என்னுடைய பொறுப்பை உணர வேண்டும். டி20 கிரிக்கெட்டில் முன்பு தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக செயல்பட்டுள்ளேன். சூர்யகுமார் தற்போது விளையாடி வரும் விதத்தைப் பார்க்கும்போதும், அதையே அவர் தொடரும்போதும், அணிக்குத் தேவையான எந்தவொரு பொறுப்பையும் ஏற்று விளையாட நான் தயார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கும்போது இதுபற்றிய உரையாடலை வைத்துக்கொள்வோம்.
ஒருநாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மாதான் நிச்சயம் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்குவார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்கள் இணைந்து விளையாடுவதில் எந்த சந்தேகமோ, பிரச்னையோ இல்லை. அவர்கள் இருவரும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளனர்.
மக்கள் விமர்சனங்களை விரும்புகின்றனர். மேலும் அது அதிகரிக்கத்தான் செய்துள்ளது. ஒருவீரர் கடுமையான சூழலை எதிர்கொள்ளும்போது அவரை எப்படி கையாள்வது என்பது அணியில் எங்களுக்குத் தெரியும். அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து நல்ல மனநிலையிலேயே வைத்திருப்போம்."
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.