செய்திகள்

முதல் டி20: ஜிம்பாப்வேயை வென்றது ஆப்கானிஸ்தான்

17th Mar 2021 07:36 PM

ADVERTISEMENT

 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் புதன்கிழமை தொடங்கியது.

அபுதாபியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் ஆப்கானிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தது.

ADVERTISEMENT

அந்த அணிக்கு குர்பாஸ் மற்றும் கரிம் ஜனத் அதிரடி தொடக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 8 ஓவரில் 80 ரன்கள் சேர்த்த நிலையில் ஜனத் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, குர்பாஸுடன் இணைந்து கேப்டன் அஸ்கர் அப்கானும் அதிரடி காட்டினார். இதனால், ஆப்கானிஸ்தான் ஸ்கோர் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் நீடித்து வந்தது.

முதலில் குர்பாஸ் 45 பந்துகளில் 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி கட்டம் வரை பேட் செய்த அப்கான் 38 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது.

199 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. அந்த அணி ரன் குவிப்பில் ஈடுபட்டாலும் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டுக்கு ஈடாக அதிரடி காட்ட முடியவில்லை. வீரர்களும் பெரிய ஸ்கோராக மாற்றத் தவறி ஆட்டமிழந்தனர்.

அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் கமும்ஹுகம்வே 44 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் 25 ரன்களைக் கூட எடுக்கவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே ஜிம்பாப்வே எடுத்தது. இதன்மூலம், 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், ஃபரீத் மாலிக் மற்றும் கரிம் ஜனத் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Tags : Afghanistan
ADVERTISEMENT
ADVERTISEMENT